நம்பர் 57.. சொன்னது என்னாச்சு? பீகார்போல் இங்கேயும் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் - டிடிவி தினகரன்
சென்னை: தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக தொடங்கிட வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பின் பீகார் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி நேற்று முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அதன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36%, பட்டியலினத்தவர்கள் 19.7%, பழங்குடியின மக்கள் 1.70%, இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினர் 15.50% இருப்பது தெரியவந்து உள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டிலும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தமிழ்நாடு அரசிடம் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி உள்ளார்.
அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவினருக்கும் போதிய இட ஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாக தொடங்குமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும் என்பது பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 57 வது வாக்குறுதியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது எடுத்திட மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என குறிப்பிட்டிருக்கும் நிலையில் அது தொடர்பாக எவ்வித முயற்சியும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய நீதியரசர் குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்திற்கு உரிய கால அவகாசத்தை, அடுத்து வந்த திமுக அரசு நீட்டிக்காத காரணத்தினால் அந்த ஆணையமும் செயலிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் அனைத்துப் பிரிவினருக்கும் நியாயமாக சென்றடைவதை உறுதிபடுத்துவதற்காகவும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு வழக்கில் வலுவான ஆதாரங்களை முன்வைப்பதற்காகவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது.
எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது என்பதை உணர்ந்து, பீகார் மாநிலத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் போதுமான நிதியை ஒதுக்கி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications