வீட்டுக்கு போலீஸ் சென்றாலே எடப்பாடி பயப்படுவார்! சரியான தொடை நடுங்கி! டிடிவி தினகரன் கிண்டல்!
சென்னை: வீட்டுக்கு போலீஸ் சென்றாலே பயப்படக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி என்றும் அவர் ஒரு தொடை நடுங்கி எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கிண்டல் செய்துள்ளார்.
சசிகலா சிறையிலிருந்த போது அவரை பார்ப்பதற்காக தன்னுடன் அமைச்சர்கள் எல்லாம் வந்தபோது, எடப்பாடி பழனிசாமி மட்டும் தன் மீதுள்ள வழக்கை காரணம் கூறி நான் வரவில்லை எனக் கூறிவிட்டதாக டிடிவி தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்துள்ள அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.

திமுக அமைச்சர்
மேலும், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வனவேங்கைகள் கட்சித் தலைவர் இரணியினிடம் நடந்துகொண்ட விதம் ஏற்கத்தக்க தல்ல என்றும் அவர் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்றுத் தெரியவில்லை எனவும் கூறினார். வயதாகிவிட்டதால் புத்தி தடுமாறி இப்படி நடந்துகொண்டாரா அல்லது தனக்கு கொம்பு கிம்பு முளைத்துவிட்டதாக அவர் நினைக்கிறாரா என டிடிவி தினகரன் அனல் கக்கினார். அரசியல் பொதுவாழ்வில் ஆணவமும், அகங்காரமும் இருந்தால் அதனை தமிழக மக்கள் உறுதியாக முறியடிப்பார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அவர் சரியான தொடைநடுங்கி என்றும், வீட்டுக்கு போலீஸ் போய் நின்றாலே பயப்படக் கூடியவர் அவர் என்றும் தினகரன் கிண்டல் அடித்தார். தனது சித்தி சசிகலா சிறையிலிருந்த போது எல்லா அமைச்சர்களும் அவரை பார்ப்பதற்காக தன்னுடன் வந்த போது எடப்பாடி பழனிசாமி மட்டும் வர மறுத்ததாகவும், காரணம் கேட்டால் என் மீதுள்ள வழக்கு காரணமாக எனக்கு சிக்கலாகிவிடும் அதனால் தான் வரவில்லை என அவர் கூறியதாகவும் தினகரன் தெரிவித்தார்.

தவறான நபர்
அப்போதே தனது சித்தியிடம், தவறான ஒருவரை முதலமைச்சராக நீங்கள் தேர்வு செய்துவிட்டீர்கள் என தாம் கூறியதாக தெரிவித்தார். ஜெயலலிதா மறைந்ததாலும், எடப்பாடி பழனிசாமி புண்ணியத்தாலும் திமுக ஆட்சிக்கு வர முடிந்ததாகவும் ஓசியில் ஆட்சி ஓடிக்கொண்டிருப்பதாகவும் ஓடும் வரை ஓடட்டும் அதை பற்றி தாம் கருத்துக் கூற விரும்பவில்லை எனவும் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு தலைகுணிவை ஏற்படுத்தும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருவதாக கூறினார்.

சுற்றுப்பயணம்
திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிடிவி தினகரன் அமமுக வளர்ச்சிப் பணிகள் பற்றி அக்கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். இதனிடையே ஓபிஎஸ் சசிகலா சந்திப்பு பற்றிய கேள்வியை தவிர்க்கும் வகையில் அடுத்த விவகாரத்திற்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications