ஒரே வாரத்தில் பழுதான புதிய டிவி.. ரூ.1.75 லட்சம் இழப்பீடு வழங்குங்க.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
சென்னை: புதிதாக வாங்கிய டிவி ஒரே வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ரூ.1.75 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என 'ரிலையன்ஸ் ரீட்டெய்ல் மற்றும் பிலிப்ஸ்' டிவி நிறுவனங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமாரசாமி. வழக்கறிஞரான இவர் மயிலாப்பூர் லஸ் சந்திப்பில் உள்ள ரிலையன்ஸ் ஷோரூமில் 49 இன்ச் அளவிலான ஹெச்.டி. தரத்திலான பிலிப்ஸ் டிவியை கடந்த 2017-ம் ஆண்டு வாங்கியுள்ளார். ஆனால், வாங்கிய ஒரு வாரத்திலேயே அந்த டிவி பழுதாகி இருக்கிறது.

இதுகுறித்து அவர் புகார் அளித்த நிலையில், அதை அந்த நிறுவனத்தினர் சரிசெய்து கொடுத்திருக்கின்றனர். ஆனால், மீண்டும் பழுதானதால் நுகர்வோர் ஆணையத்தில் செல்வக்குமாரசாமி புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஷோரும், பிலிப்ஸ் டிவி நிறுவனம், சர்வீஸ் செய்யும் சென் டெக் நிறுவனம் ஆகியவை எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, நுகர்வோர் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், "மூன்று நிறுவனங்களும் சேர்ந்து டிவியின் விலை 65 ஆயிரத்து 390 ரூபாய், நேர விரயம், மன உளைச்சல் ஆகியவற்றிற்கான இழப்பீடாக செல்வக்குமாரசாமிக்கு ஒரு லட்சம் ரூபாயும், வழக்கு செலவு தொகையாக 10 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்து 390 ரொக்கத்தை இரண்டு மாதங்களில் புகார்தாரருக்கு வழங்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.