திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா
சென்னை: தவெக நடத்திய சர்வேயில் திமுகவை விடவும் 2 சதவிகித வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அந்த சர்வேயில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, இதன் காரணமாக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்ற வதந்தியை பரப்பினார்கள் என்று கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட சூழலில், தவெக தரப்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை ஆர்கே நகர் தொகுதியில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், வடசென்னையை திமுகவும், அதிமுகவும் எப்போதும் ஏழ்மையாகவே வைத்திருக்கிறார்கள்.

அண்ணா நகருக்கும், ஆர்கே நகருக்கும் அத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன. 2014ல் திமுக 40க்கு 40லும் தோல்வி அடைந்த சமயத்தில் தான் திமுகவில் வேலை செய்ய தொடங்கினேன். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது அத்தனை போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். ஆனாலும் எனக்கு திமுகவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் சரியான எதிரியை திமுக பார்க்கவில்லை.
அதன் காரணமாகவே விஜய் 6 மாவட்டங்களுக்கு சென்ற உடனேயே கரூர் சம்பவம் நடந்தது. ஆளும் தரப்பு எடுக்கும் சர்வேக்களிலேயே திமுகவை நடுங்க வைத்தது. அதனால் தவெகவை பிரச்சாரம் செய்ய விடாமல் முடக்கினார்கள். திருவாரூரில் கூடிய கூட்டத்தை பார்த்து திமுகவே பயந்துவிட்டது. கடந்த 15 நாட்களாகவே தவெக - பாஜக உடன் கூட்டணி செல்வதாக செய்திகள் வெளியாகியது.
திமுக, அதிமுகவும் சேர்ந்து பரப்பிய செய்தி அது. மிரட்டுபவர்கள் தான் கோழை, அமைதியாக இருப்பவன் தான் வீரன். அதேபோல் காலை மாலை என்று பேசிக் கொண்டிருப்பவனே அரசியல் தெரியாதவன். பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், திட்டமிட்டபடி ஜனநாயகன் ரிலீஸ் ஆகியிருக்கும். ஆனால் இப்போது வரை ஜனநாயகன் ரிலீஸாகவில்லை. கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்கள் இதனை கவனிக்க வேண்டும்.
மதச்சார்பின்மை கொள்கையில் இருந்து வெளியேறி இருந்தால், டெல்லியே விஜய்யை முதல்வராக்கி இருக்கும். ஆனால் விஜய் கொள்கை பிடிப்போடு இருக்கிறார். அதேபோல் அதிமுகவுடன் கூட்டணிக்கு நாம் செல்லவில்லை என்ற உடன் நம்மை விமர்சிக்க தொடங்குகிறது. கரூரில் ஷூட்டிங் நடத்தியதாக பொய் பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். விஜய்க்கு எங்கு வேண்டுமானாலும் கூட்டம் கூடும்.
எதற்காக கரூரில் ஷூட்டிங் நடத்த வேண்டும்.. அது முழுக்க முழுக்க பொய் பிரச்சாரம். அண்மையில் தவெக சார்பாக எடுக்கப்பட்ட சர்வேயில் திமுகவை விட 2% வாக்குகளை அதிகமாக எடுத்திருக்கிறோம். அதிமுக 3வது இடத்திற்கு செல்கிறது. அதன் காரணமாகவே நம்மை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
6 மாதங்களுக்கு முன்பாக தவெகவுக்கு 18% வாக்குகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். பின்னர் செங்கோட்டையன் இணைந்த போது 32% வாக்குகள் இருப்பதாக கூறி இருந்தார். தொடர்ந்து திமுகவுக்கு நெருக்கமால தவெக சென்றுவிட்டதாக கூறி வந்த ஆதவ் அர்ஜுனா, இப்போது திமுகவை விடவும் 2% வாக்குகள் கூடுதலாக இருப்பதாக புதிய டேட்டாவை தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications