குடும்பமே விஜய்க்கு கடனாளிகள்! "அம்மா, அப்பா, மனைவி என்னிடம் கடன் வாங்கியுள்ளனர்" வேட்புமனுவில் தகவல்
சென்னை: தவெக தலைவர் விஜய் இன்றைய தினம் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியானது. அதில் தனது தனது அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தினர் அனைவரும் தன்னிடம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தவெக இந்த முறை மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சொத்துகள் இல்லை
விஜய் தனது பிரமாண பத்திரத்தில் குடும்ப உறுப்பினர்களின் சொத்து, வருமானம் உள்ளிட்ட சில முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன்படி விஜய் மனைவிக்குச் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் மனைவி, மகன், மகள் பெயரில் அசையா சொத்துகள் எதுவுமே இல்லை என்று விஜய் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, தன்னைத் தவிரத் தனது குடும்பத்தில் யார் பெயரிலும் விஜய் சொத்துகளை வாங்கவில்லை.. கடந்த 25 ஆண்டுகளாக அனைத்து அசையா சொத்துகளையும் விஜய் தனது பெயரிலேயே வாங்கியுள்ளார் என்பது அவரது பிரமாண பத்திரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மனைவி, மகன், மகள் பெயரில் விஜய் எந்தவொரு சொத்தும் வாங்கவில்லை. மனைவி சங்கீதா பெயரில் கடைசியாக 2000ம் ஆண்டு 3000 சதுரடியில் அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கியதாக என்று தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடனாளிகள்
மேலும், அவர் தனது பிரமாண பத்திரத்தில் தனது அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தினர் அனைவரும் தன்னிடம் கடன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யைத் திரையுலகில் அறிமுகப்படுத்தி, சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்த்தியதில் அவரது தந்தைக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. இதற்கிடையே தனது தந்தை சந்திரசேகர் தன்னிடம் ரூ.3.02 கோடி கடன் பெற்றுள்ளதாக விஜய் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தாய் சோபா சேகர் தன்னிடம் இருந்து ரூ.87 லட்சம் கடன் லட்சம் கடன் வாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனைவி, பிள்ளைகள்
விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்து வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இவர்களின் விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது. இருப்பினும், சட்டப்படி இன்னும் விவாகரத்து வழங்கப்படவில்லை என்பதால் மனைவி என்ற முறையில் சங்கீதாவின் சொத்து விவரங்களையும் விஜய் குறிப்பிட்டுள்ளார். சங்கீதாவுக்கு ரூ.15,51,79,421 மதிப்பிலான சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், மனைவி சங்கீதா தன்னிடம் ரூ.12.60 கோடி கடன் வாங்கியுள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். தனது மகன் ஜேசன் சஞ்சய் கூட தன்னிடம் ரூ.8 லட்சம் கடன் வாங்கி இருப்பதாக விஜய் தெரிவித்துள்ளார். அதேபோல தனது மகள் திவ்யா சாசாவும் தன்னிடம் ரூ.4.60 லட்சம் கடன் வாங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது தனது குடும்பத்தில் அனைவருமே தனக்குக் கடனாளிகளாக இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரி பாக்கி
அதேபோல 2011-2012ல் ரூ.91 லட்சம் வருமான வரிப் பாக்கி வைத்து இருப்பதாக விஜய் தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல 2015-16 நிதியாண்டில் ரூ.2.38 கோடி வருமான வரிப் பாக்கி வைத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதாவது மொத்தம் ரூ.3.44 கோடி வருமான வரிப் பாக்கி வைத்திருப்பதாக விஜய் தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications