"உளமார.." விஜய் உறுதிமொழியில் இருந்த அந்த ஒரு வார்த்தை.. ஆஹா அப்போ அவர் சொல்லும் அரசியல் செய்தி என்ன
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சித் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியை அவர் எடுத்துக் கொண்டார். அப்போது இறுதியில் "உளமார உறுதி கூறுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த உளமார என்பதற்குப் பின்னணியில் தமிழகத்தில் ஒரு அரசியலே இருக்கிறது. அது குறித்து நாம் பார்க்கலாம்.
நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி இருக்கிறார். இப்போது சினிமாவில் நடித்து வந்தாலும் கூட அரசியல் பணிகளையும் அவர் தொடர்ந்து கவனித்தே வருகிறார்.

உறுதிமொழி: அதன்படி இன்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வெளியிடப்பட்டது. மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதிமொழியை அவர் எடுத்துக் கொண்டார். அப்போது இறுதியில் உளமார உறுதி கூறுகிறேன் என்று அவர் குறிப்பிட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதற்குத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சர்வதேச பின்னணி: பிரிட்டன் நாட்டில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதியான சார்லஸ் பிராட்லா ( Charles Bradlaugh) அடிப்படையில் ஒரு நாத்திகர். இவர் 1880இல் நடந்த தேர்தலில் நார்த்தாம்ப்டனிலிருந்து எம்பியாக தேர்வானார். தீவிர நாத்திகராக இருந்ததால் அவர் எம்பியாக பதவியேற்கும் போது, கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் அவரை எம்பியாக அங்கீகரிக்கப் பிரிட்டன் நாடாளுமன்றம் மறுத்துவிட்டது.
இல்லாத கடவுளைச் சாட்சியாகப் பதவியேற்க முடியாது என்ற பிராட்லா, தனது வெற்றியை ரத்து செய்வது பிரிட்டன் மக்களின் ஜனநாயக உரிமைகளை இழிவு செய்யும் செயல் என்று விமர்சித்தார். இதையடுத்து வேறு வழியில்லாமல் அவரை பதவியேற்கச் சம்மதித்தது. மேலும், 1886 முதல் கடவுளின் பெயரால் உறுதிமொழியேற்கத் தயங்குவார் உளமார அல்லது மனசாட்சியின்படி உறுதியேற்கலாம் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதற்கான மாற்றத்திற்கு விதை போட்டவர் திமுக நிறுவனர் அண்ணா.. 1967ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைத் தேர்தலில் திமுக வென்று ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முன்பு வரை அனைவரும் 'கடவுள் அறிய' அல்லது 'இறைவனின் பெயரால்' என்று குறிப்பிட்டே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
ஆனால், திராவிட கருத்துகளைக் கொண்ட அண்ணா கடவுள் அறிய என்ன சொல்லி சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளவில்லை. மாறாக 'உளமார' அல்லது 'மனசாட்சிப்படி' என்று சொல்லி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதற்கு அப்போது அண்ணா ஒரு விளக்கத்தையும் கொடுத்திருந்தார். அதாவது கடவுளின் பெயரால் என்று சொல்லிப் பதவியேற்றால்.. பரிகாரம், காணிக்கை கொடுத்து சமரசம் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆனால், உளமார என்று சொன்னால் மனசாட்சியுடன் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என்று விளக்கமளித்திருந்தார்.
உறுதிமொழி: அதன் பிறகு கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரும் அண்ணா பாதையில் உளமார என்று சொல்லியே உறுதிமொழி ஏற்றனர். இருப்பினும் 1991இல் முதல்முறையாக ஆட்சி அமைத்த ஜெயலலிதா ஆண்டவன் மீது ஆணையிட்டு என்று சொல்லி உறுதிமொழி ஏற்றார். இருப்பினும், அப்போது அதிமுகவில் இருந்த மூத்த தலைவர்கள் நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உளமார என்று சொல்லியே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் உளமார என்று சொல்லியும் அதிமுக ஆட்சிக்கு வரும் போது கடவுள் மீதும் உறுதிமொழி ஏற்பது தொடர்கிறது. ஜெயலலிதாவுக்குப் பிறகு வந்த ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோரும் கடவுள் மீதே உறுதிமொழி ஏற்றனர். அதேநேரம் 10 ஆண்டுகளுக்கு பின் 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்த போது ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்கும் போது உளமார என்று சொல்லியே உறுதிமொழி ஏற்றார்.
உளமார உறுதிமொழி ஏற்கிறேன்: இப்படி தமிழக அரசியலில் உளமார- கடவுள் மீதான உறுதிமொழிக்குப் பின்னால் மிகப் பெரிய அரசியலே இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் இப்போது பதவி பிரமாணம் எதுவும் எடுக்கவில்லை என்ற போதிலும் அதன் கட்சி உறுதிமொழியில் கடவுள் மீது ஆணையாக என்பதற்குப் பதிலாக உளமார என்று இருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதேநேரம் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்படும் போது மட்டுமே விஜய் எந்த பாதையில் பயணிக்கப் போகிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியும் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications