விஜய் ஆவேசம்.. TNPSC தேர்வு விவகாரம்.. "திறமையின்மை! திமுக அரசால் யாருக்கு என்ன பயன்?" கடும் தாக்கு
சென்னை: இன்று நடைபெறவிருந்த குரூப் 2 முதன்மைத் தேர்வுகள் சில காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், பல்வேறு தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த இந்த அரசு இருந்து என்ன பயன் என்றும் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று குரூப் 2 முதன்மைத் தேர்வு நடைபெற இருந்தது. உதவி ஆய்வாளர், உதவிப்பிரிவு அலுவலர் உட்படப் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருந்த 828 பணியிடங்களை நிரப்பு இந்தத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. காலையில் பாடத்தேர்வும், பிற்பகலில் தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குரூப் 2 தேர்வு
சென்னையில் அரும்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட 7 மையங்களில் தேர்வுகள் நடக்கவிருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றப்பட்டது, தேர்வு எண்கள் இல்லை முறையாக இல்லாதது எனப் பல குளறுபடிகள் ஏற்பட்டன. நந்தனம் மையத்தில் சரியான நேரத்தில் வினாத்தாளே வரவில்லை எனச் சொல்லப்பட்டது. தேர்வெழுத வந்த பலரும் இதற்கு அதிருப்தி தெரிவித்த நிலையில், க்ரூப் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே தவெக தலைவர் விஜய்யும் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். பல ஆயிரம் இளைஞர்களின் நம்பிக்கையை திமுக அரசு சிதைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள விஜய், இளைஞர்களுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கித் தராத அரசு இருந்து என்ன பயன் என்றும் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும் விமர்சித்துள்ளார்.
விஜய் விமர்சனம்
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசுப் பணி என்கிற கனவோடு TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வை எழுதவிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.
அரசுப் பணி என்பது, இளைஞர்கள் ஒவ்வொருவரின் உயரிய கனவும் லட்சியமும் ஆகும். அதை அடைய அவர்கள் பல ஆண்டுகளாக இரவு பகலாகக் கண்விழித்துப் படித்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவார்கள். அப்படிப்பட்ட ஈடு இணையற்ற உழைப்புடன் தயாராகி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமது எதிர்கால வாழ்வு குறித்த மிகப் பெரிய கனவுகளோடு முதன்மைத் தேர்வை எழுத வருவார்கள். அந்த நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டால், இவ்வளவு காலம் உழைத்த உழைப்பு வீணாகி விடுமோ என்ற அச்சம் அவர்களின் மனத்தில் ஆழப் பதிந்துவிடும்.
விளம்பர மாடல் திமுக அரசு
ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் நடத்தப்பட்டாலும் அதற்காக மீண்டும் மீண்டும் தங்களது கடின உழைப்பை முதலீடாக்கும் சூழல் உருவாகும். இதனால் இளைஞர்களின் பெறற்கரிய காலம் வீணாவதுடன் மனத்தளவில் அவர்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும். எதிர்காலம் குறித்துக் கனவுகளோடு இருந்த இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கிய இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு யாருக்காக இயங்குகிறது?
இளைஞர்களுக்கு நல்லதொரு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத இந்த அரசு, இருந்து என்ன பயன்? இன்று TNPSC Group 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது, இந்தக் கபட நாடகத் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தக்கம் பாடம் புகட்டுவார்கள்
ஏற்கெனவே நகராட்சித் துறையில் வேலைக்கான தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், TNPSC நடத்தும் இந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் பின்னணியில் என்ன நடந்திருக்குமோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இன்னும் எந்த மிகப் பெரிய முறைகேட்டை மறைக்க இது நடந்துள்ளதோ என்ற சந்தேகம் எழாமல் எப்படி இருக்கும்? இதற்கு உரியவர்கள், உண்மையை நேர்மையாகச் சொல்ல வேண்டியது அவர்கள் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.
எனவே, வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நிகழாவண்ணம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வெற்று விளம்பரத்தினால் மட்டுமே இயங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு இளைஞர் பட்டாளம் வெகுண்டெழுந்து, ஜனநாயக முறைப்படி தக்க பாடம் புகட்டுவது உறுதி" என்று அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications