விஜய் உடனான சந்திப்புக்கு பின்.. அந்த நேர்காணலை நான் கொடுக்கவில்லை.. பிரவீன் சக்ரவர்த்தி மறுப்பு
சென்னை: தவெகவில் இணையும் எண்ணம் இல்லை என்று பிரவீன் சக்ரவர்த்தி பேட்டி கொடுத்ததாக The Print ஆங்கில ஊடகத்தில் வெளியான தகவல்களுக்கு, காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான பிரவீன் சக்ரவர்த்தி டிசம்பர் 5ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யை சந்தித்தார். கடந்த சில மாதங்களாகவே தவெக - காங்கிரஸ் இடையில் கூட்டணி அமைய உள்ளதாக பேசப்பட்டு வந்தது. ஆனால் பீகார் தேர்தல் தோல்விக்கு பின் ராகுல் காந்த் எந்த ரிஸ்கையும் எடுக்க விரும்பவில்லை.

இதனால் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்தது. இந்தக் குழு முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தது. இப்படியான சூழலில், பிரவீன் சக்ரவர்த்தி சென்னையில் உள்ள பட்டினம்பாக்கம் வீட்டில் வைத்து விஜய்யை சந்தித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி பலமுனை பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறதா என்ற கேள்வி எழுந்தது.
அதேபோல் விஜய்யுடன் கூட்டணி அமைத்தால், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்று அக்கட்சி தலைமை கருதுவதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் விஜய் உடனான சந்திப்பு குறித்து தி பிரிண்ட் இணையதளத்திற்கு பிரவீன் சக்ரவர்த்தி பேசி இருக்கிறார்.
அதில் பிரவீன் சக்ரவர்த்தி பேசுகையில், ஒவ்வொரு சந்திப்புக்கு பின்பும் அரசியல் காரணங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.. விஜய்யுடன் நடந்த சந்திப்பு சாதாரணமானதாக கூட இருந்திருக்கலாம்.. இட்லி, வடை, தோசை சாப்பிடக் கூட விஜய்யை சந்தித்திருக்கலாம். அவரின் படங்கள் குறித்து கூட பேசி இருக்கலாம். அதனால் விஜய்யை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை..
அதேபோல் விஜய்யை சந்தித்ததால், தவெகவில் இணைகிறேன் என்று கிடையாது. தவெகவில் இணைய வேண்டும் என்ற எந்த எண்ணமும் என்னிடம் இல்லை. நான் விஜய்யை சந்தித்ததால், தவெக - காங்கிரஸ் இடையில் கூட்டணியா என்று ஊடகங்கள் கருதலாம். அது அவர்களின் வேலை.. அதுதொடர்பாக நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பிரவீன் சக்ரவர்த்தியின் இந்த விளக்கம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித சிக்கலும் உருவாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம் கொடுத்துள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் வரும் நாட்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த நிலையிலொ இப்படியொரு நேர்காணலை கொடுக்கவில்லை என்று பிரவீன் சக்ரவர்த்தி மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications