‘அந்த’ கட்சியுடன் தவெக கூட்டணியா? இல்லவே இல்லை! என்ன பொசுக்குனு புஸ்ஸி ஆனந்த் இப்படி சொல்றாரு?
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு விஜய் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் உடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைப்பதாகச் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் யாருடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என விளக்கம் அளித்துச் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த்.
அரசியலில் முதல் தேர்தலை சந்திக்க இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீவிரமாக திட்டமிட்டு பணியாற்றி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு என ஏற்கனவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் புதுச்சேரியிலும் விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியில் புஸ்ஸி தொகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு எம்எல்ஏ ஆகவும் இருந்திருக்கிறார்.'

விஜய் கட்சி
சமீபத்தில் மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. சில நாட்கள் கழித்து புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமியை சந்தித்துப் பேசி இருந்தார் ஆனந்த். மேலும், விஜயும் பலமுறை ரங்கசாமியை சந்தித்துப் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலோடு புதுச்சேரி தேர்தல் நடத்தப்படலாம் என சொல்லப்படும் நிலையில் புதுச்சேரி அரசியலிலும் தமிழக வெற்றிக் கழகம் கால் பதிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
என்.ஆர்.காங்கிரஸ்
குறிப்பாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. மேலும் ரங்கசாமியை ஆனந்த் சந்திப்பும் அதனால் தான் நடந்தது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் புதுச்சேரியில் எந்தக் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம்.
தமிழக வெற்றிக் கழகம்
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
2026 தேர்தல்
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று வார இதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
புஸ்ஸி ஆனந்த்
இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற வதந்திகளை பரப்பும் ஊடகத்தின் பொய்ச் செய்திகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களைக் கழகத் தலைவர் அவர்கள் விரைவில் அறிவிப்பார். தேர்தல் நிலைப்பாடு குறித்தும் கழகத் தலைவர் அவர்களின் முடிவே இறுதியானது. எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications