118-ஐ விடுங்க! விஜய்க்கு அக்னி பரீட்சை? சபாநாயகர் தேர்தலில் திமுக- அதிமுக கைகோர்த்தால் போச்சு!
சென்னை: தவெக 108 இடங்களில் வென்றுள்ள நிலையில் அவர்களுக்கான அக்னி பரீட்சையே சபாநாயகர் தேர்தலில்தான் இருக்கிறது என மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். என்னதான் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மைக்கான பட்டியலை அவர் விஜய் கொடுத்தாலும் இதுதான் முக்கியமானது என்கிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அதிரடி மாற்றத்தை 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து பத்திரிகையாளர் மணி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஒரு 'தொங்கு சட்டமன்றத்தை' (Hung Assembly) உருவாக்கியுள்ளன. 1952-க்குப் பிறகு தமிழக வரலாற்றில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் இதுவே முதல்முறை. திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் மக்கள் ஒருசேர நிராகரித்துள்ளனர்.

அதே நேரம் தவெகவுக்கான முழு ஆதரவையும் அவர்கள் கொடுக்கவில்லை. குறிப்பாக, கோட்டை என கருதப்பட்ட சென்னையில் திமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது, அக்கட்சியின் தலைமைக்கு விடப்பட்ட மிகப்பெரிய எச்சரிக்கை.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் தோல்வியடைந்தது தமிழக அரசியலில் ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1967-ல் பக்தவத்சலம், 1996-ல் ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு, பதவியில் இருக்கும்போதே தோற்றுப்போன மூன்றாவது முதலமைச்சர் என்ற பெயரை ஸ்டாலின் பெற்றுள்ளார்.
அதே சமயம், தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெறும் இரண்டு ஆண்டுகளில் 38 சதவீத வாக்குகளைப் பெற்று அரியணையின் அருகே வந்துள்ளது ஒரு மாபெரும் சாதனை. விஜய்யை எள்ளி நகையாடியவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் விஜய்க்கு கிடைக்காதது ஒரு சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது.
காங்கிரஸ் அல்லது பாமக போன்ற கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே அவரால் ஆட்சியைப் பிடிக்க முடியும்.விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரும் பட்சத்தில், அவருக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய சவால் 'சபாநாயகர் தேர்தல்' ஆகும்.
பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே நடக்கும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே அவரால் முதலமைச்சராகத் தொடர முடியும். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து விஜய்யின் வெற்றியைத் தடுக்க வேறு ஒருவரை சபாநாயகராக நியமித்து ஒரு வேளை அந்த சபாநாயகரை எதிர்த்து போட்டியிடும் விஜய் தரப்பு சபாநாயகர் தோல்வி அடைந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பே இல்லாமல் தவெக தோல்வியடையும் என்பதால் வரும் நாட்கள் தமிழக அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அதாவது முதலில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் அதிக தொகுதிகளின் எண்ணிக்கையை வைத்து விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். அப்போது விஜய் தனக்கான பெரும்பான்மை பட்டியலை அளிக்க வேண்டும்.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக அன்புமணி உள்ளிட்டவைகளுடன் சேர்த்து விஜய் கட்சிக்கு 120 முதல் 123 இடங்கள் கிடைக்கிறது என்றே வைத்துக் கொண்டாலும், முதலில் விஜய்க்கு மட்டும் ஆளுநர் பதவிப்பிரமாணம் நடத்தலாம். இல்லாவிட்டால் தவெக அமைச்சர்களுடன் சேர்த்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கலாம்.
பின்னர் தவெக ஒரு இடைக்கால சபாநாயகரை நியமிப்பார்கள். அவர் தவெக எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இதைத் தொடர்ந்து சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும். ஒரு வேளை திமுக, அதிமுக இணைந்து விஜய்யை தடுக்க நினைத்தால் அவர்கள் ஒருவரை சபாநாயகராக நியமிக்கக் கூடும். அப்போது எதிர்தரப்பு, விஜய் தரப்பு என இரு வேறு சபாநாயகர்களுக்கான தேர்தல் நடைபெறும். அந்த தேர்தலில் விஜய் தரப்பு சபாநாயகர் தோல்வி அடைந்துவிட்டால் விஜய்யால் ஆட்சி அமைக்க உரிமை கோர முடியாது. ஒரு வேளை சபாநாயகர் தேர்தலில் வென்று பெரும்பான்மையை நிரூபித்துவிட்டால் ஓராண்டுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகளால் கொண்டு வர முடியாது. இவ்வாறு மணி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications