கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்?
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் நேற்று, தவெக தலைவர் விஜய், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே நேரத்தில் அறிமுகம் செய்து வைத்ததார். இந்நிலையில் தமிழக அரசியல் களத்தில் ஜாம்பவான்களாக இருக்கும் ஸ்டாலின் உள்ளிட்டோரை எதிர்க்கும் வேட்பாளர்கள் யார்? யார்? என்பது குறித்துப் பார்க்கலாம்..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், முக்கிய 'நட்சத்திர' தொகுதிகளில் யார் யார் மோதுகின்றனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
அதில் சென்னை நகரில் உள்ள கொளத்தூர் மற்றும் பெரம்பூர் தொகுதிகள் இப்போதே அதிக கவனம் பெறும் தொகுதிகளாக மாறியுள்ளன. சென்னை நகரின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் களம் காண்கிறார்.

2026 சட்டசபை தேர்தல்
கடந்த தேர்தல்களிலும் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற அவர், இந்த முறை மீண்டும் போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. முதல்வரை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன் போட்டியிடுகிறார். அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் சௌந்திர பாண்டியன் லூர்து சேத்து களம் இறங்கியுள்ளார். தவெக சார்பில் வி.எஸ். பாபு இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் கொளத்தூர் தொகுதியில் நான்கு முக்கிய கட்சிகள் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. முதல்வர் நேரடியாக களம் காணும் தொகுதி என்பதால், அனைத்து கட்சிகளும் இந்த தொகுதியில் அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரம்பூர் தொகுதி
அதேபோல் சென்னை நகரிலேயே மற்றொரு முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் பெரம்பூர் தொகுதியும் இந்த முறை 'நட்சத்திர' தொகுதியாக மாறியுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் ஆர்.டி. சேகர் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பிலும் ஒரு வேட்பாளர் களம் இறங்க உள்ளார். ஆனால் இந்த தொகுதியை அதிகம் பேச காரணம், தவெக தலைவர் விஜய் நேரடியாக இந்த தொகுதியில் போட்டியிடுவது தான்.
நடிகர் விஜய்
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததிலிருந்து அவரது முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், அவர் போட்டியிடும் தொகுதி மீது இயல்பாகவே அதிக கவனம் திரும்பியுள்ளது. இவர்களுடன் நாம் தமிழர் கட்சி சார்பில் வெற்றித் தமிழன் போட்டியிடுகிறார். இதனால் பெரம்பூர் தொகுதியிலும் நான்கு முனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விஜய் களம் இறங்கியுள்ளதால், இந்த தொகுதி மாநில அளவில் முக்கியமாக பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
நட்சத்திர தொகுதிகள்
சென்னை சேப்பாக்கம் தொகுதியிலும் இந்த முறை கடும் போட்டி நிலவ உள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதிராஜா ராம் களம் இறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆயிஷா மற்றும் தவெக சார்பில் செல்வம் ஆகியோரும் இந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதேபோல் திருச்செங்கோடு தொகுதியிலும் முக்கியமான மோதல் உருவாகியுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரன், அதிமுக சார்பில் சந்திர சேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் ரேவதி மற்றும் தவெக சார்பில் அருண்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி
இதுமட்டுமல்லாமல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெக அருண்குமார் போட்டியிட உள்ளார். அதேபோல் காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை எதிர்த்து டாக்டர் பிரபு களம் காண உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை எதிர்த்து தவெக நிர்வாகி விஜய் என்பவர் போட்டியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications