அதெப்படி ஒரே நேரத்தில்..தவெக விஜய் கொடி ஏற்றும் போது கட்டான லைவ்? பஞ்சாயத்தை கிளப்பும் நண்பா நண்பீஸ்
சென்னை: செய்திகளிலும், சமூக ஊடகங்களிலும் எங்கு பார்த்தாலும் தமிழக வெற்றி கழகத்தின் கொடி குறித்த பேச்சு தான் இருக்கிறது. விஜயின் கட்சிக் கொடியும், பாடலும் காப்பி என விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில் ஏற்கனவே களத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் விஜயை கண்டு பயந்து விட்டதாக கூறி வருகின்றனர் அவரது தமிழக வெற்றிக்கழகத்தினர்.
தமிழகத்தின் மிகப் பிரபலமான நாயகர்களில் ஒருவராக சினிமாவில் வலம் வரும் விஜய் தற்போது அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார். சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலில் குதித்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது.

விஜயின் அரசியல் வருகை குறித்து விமர்சனம் வைத்தாலும் இளைஞர்கள் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பலர் அவரது அரசியல் கட்சி வருகையை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்தனர். மேலும் ஆளும் திமுக தொடங்கி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் விஜயின் கட்சி குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
தற்போது கோட் படத்தில் நடித்து முடித்து இருக்கும் விஜய் படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகு அதாவது செப்டம்பர் முதல் வாரத்தில் கோட் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் கடைசி வாரத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்துகிறார். அதற்கு பிறகு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம், மண்டல மாநாடுகள் என பெரிய திட்டமே விஜய் வைத்திருக்கிறார் என கூறுகிறார்கள். இந்த நிலையில் தனது கட்சியின் கொடியையும் பாடலையும் நேற்று வெளியிட்டார்.
விஜய் கோட் படத்தின் வெளியீட்டின் போது தியேட்டர்கள் உள்ளிட்ட பல இடங்களில் கட்சியின் கொடியை ஏற்றி மக்களிடம் கொண்டு சேர்க்கவே விஜய் இந்த ஏற்பாட்டை செய்ததாக கூறினர் தமிழக வெற்றிக் கழகத்தினர். இந்த நிலையில் நேற்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.
மஞ்சள், சிவப்பு நிறங்களோடு இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்று இருப்பது போலவும் பச்சை நீல நட்சத்திரங்களும் அந்த கொடியில் இடம் பெற்று இருந்தன. இந்த நிலையில் கட்சிக்கொடி வெளியான சில நிமிடங்களிலேயே ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அது வேகமாக பரவியது. மேலும் கட்சியின் பாடலையும் விஜய் வெளியிட்டார் .இந்த நிலையில் கட்சியின் கொடி ஸ்பெயின் நாட்டு கொடியை போல இருப்பதாகவும் கேரளா அரசின் சின்னத்தில் இருப்பது போல இரண்டு யானைகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தனர்.
மேலும், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற பாடலான 'நான் அடிச்சா தாங்க மாட்ட' பாடலின் ரீமிக்ஸ் போல கட்சியின் பாடல் இருப்பதாக விமர்சனங்கள் இருந்தது. இது மட்டுமல்லாமல் மட்டும் அல்லாமல் தங்கள் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை விஜய் கட்சி கொடியில் பயன்படுத்தியதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படியாக நேற்று தொடங்கி இன்று வரை சமூக வலைத்தளங்களில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயின் அரசியல் வருகை பலருக்கு எரிச்சலை ஏற்படுத்திருப்பதாகவும் இதன் காரணமாகவே அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது என கூறுகின்றனர் அவரது கட்சியினர். மேலும் விஜய் நேற்று கட்சி கொடியை ஏற்றும் நிகழ்வு அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அப்போது திடீரென அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என செய்திகள் பரவியது.
இதை அடுத்து விஜயின் நிகழ்வு கட் செய்யப்பட்டு அமைச்சரவை மாற்றம் குறித்தான செய்தி அனைத்து சேனல்களிலும் பிரேக்கிங் நியூஸ் ஆக வெளியிடப்பட்டது. இந்நிலையில் இது திட்டமிடப்பட்ட நிகழ்வு இல்லை, விஜயின் அரசியல் வருகையை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் நேரலை நிகழ்வை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே அமைச்சரவை மாற்றம் என செய்தி சேனல்களை ப்ரேக்கிங் நியூஸாக போட வைத்ததாக சொல்கின்றனர். மேலும் இதே கேள்வியை தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற மூத்த பத்திரிகையாளரான மணியும் கேட்டிருக்கிறார். இதை அடுத்து இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தினர் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதை வைத்து பெரிய விவாதத்தையே உண்டு பண்ணி உள்ளனர்.












Click it and Unblock the Notifications