வேதனையின் உச்சம்.. தவெக நிர்வாகி மரணம்.. நண்பனின் உடலை பார்க்க முடியாமல் கதறி அழுத புஸ்ஸி ஆனந்த்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வந்த சஜி (எ) அந்தோணி சேவியர் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சஜியின் உடல் இருந்த மருத்துவமனைக்கு சென்ற பொதுச்செயலாளர் ஆனந்த், காரில் இருந்தவாறு அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுத சம்பவம் அக்கட்சியினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. தவெக தலைவர் விஜய் தனது கடைசி படத்தின் பணிகளை முடித்த பின், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்பாக மாவட்ட அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பணியாற்றி வருகின்றனர்.

அதற்கேற்ப இதுவரை 114 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே தவெக பொதுக்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டு வந்தது. அதற்கான பணிகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கட்சிப் பணிகளுக்கான சென்னையில் தங்கியிருந்த தவெக நிர்வாகி மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் சஜி என்ற அந்தோணி சேவியர். இவர் கட்சி பணிகளுக்கான சென்னையில் முகாமிட்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தவெக நிர்வாகிகளை சோகமடைய வைத்துள்ளது. ஏனென்றால் பாளையங்கோட்டை சஜி விஜய் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்-க்கு மிகவும் நெருக்கமானவர்.
சில நாட்களுக்கு முன்பு நடந்த நிர்வாகிகள் அறிவிப்பு கூட்டத்தில் கூட விஜய் உடன் சஜி இருந்தார். இந்த நிலையில் சஜி உயிரிழந்த சம்பவம் விஜய் மட்டுமல்லாமல் பொதுச்செயலாளர் ஆனந்த்-க்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சஜியின் உடல் ஸ்ரீபெரும்புதூரில் கட்சியினர் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சஜியின் உடலை பார்க்க மருத்துவமனைக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் சென்ற போது, தவெக தொண்டர்கள் ஏராளமானோர் கூடினர். அப்போது உணர்ச்சிப்பெருக்குடன் காணப்பட்ட ஆனந்த், அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் காரில் இருந்தவாறு கண்ணீர் சிந்தி சோகத்தை வெளிப்படுத்தினார். இது அங்கிருந்த தவெக தொண்டர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.












Click it and Unblock the Notifications