அதிமுகவுடன் கூட்டணி என்பதில் உண்மை இல்லை.. தவெக பரபர விளக்கம்!
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் த.வெ.க கூட்டணி வைக்கப்போவதாக வெளியாகும் தகவல் முற்றிலும் தவறானது, அடிப்படை ஆதாரமற்றது, உள்நோக்கத்தோடு தான்தோன்றித்தனமாக சிலர் கருத்து கூறி வருகின்றனர் என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தவெக-வின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. தவெக தலைவர் விஜய் மாநாட்டில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு, நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெக-வின் குறிக்கோள் என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம். கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என தவெக மாநாட்டில் அறிவித்திருந்தார் விஜய். இதன் மூலம், கூட்டணி அமைத்து போட்டியிட விஜய் தயாராக இருப்பது தெளிவானது.
இதைத்தொடர்ந்து, அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் பரவின. காரணம், மாநாட்டில் பேசும்போது திமுக, பாஜகவை காட்டமாக விமர்சித்த விஜய், அதிமுகவை சீண்டவில்லை. அதேபோல, அதிமுக தலைவர்களும் விஜய்யை பெரிதாக விமர்சிக்கவில்லை. இதனால், 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.
இந்தச் சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல் நிலைப்பாடு குறித்தும் தமது உரையில் கட்சித் தலைவர் தெளிவாக, விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். கட்சித் தலைவரின் வழிகாட்டுதலின்படி தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி் அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு அஇஅதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று தொடர்புப்படுத்தி, பிரதான தமிழ் நாளிதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைக் கொண்டு நேற்றுத் தலைப்புச் செய்தி் வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது.
ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக அரசியல் விமர்சகர்கள் என்கிற போர்வையில் உள்நோக்கத்தோடு, தான்தோன்றித்தனமாகச் சிலர் தெரிவிக்கும் பொய்யான கருத்துகளின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடர்புப்படுத்திப் பரப்பப்படும் இது போன்ற உண்மைக்கு மாறான பொய்ச் செய்திகளைத் தமிழக மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என்பதை இத்தகைய பொய்யான செய்திகளை உள்நோக்கத்தோடு பரப்புபவர்களுக்கு நினைவூட்டுகிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பாதை, முழுக்க முழுக்கத் தமிழக மக்களின் நலனுக்கானது. வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கட்சித் தலைவர் ஆற்றிய உரையில் தெரிவித்த நிலைப்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மை பலத்தோடு நாட்டு மக்களின் பேராதரவோடு வென்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் குறிக்கோள்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications