அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேட்ட ஒரே கேள்வி.. கடைசி வரை பதில் அளிக்காத விஜய்!
சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திமுக உட்பட அத்தனை கட்சிகளும் வலியுறுத்திய போது, முதல்வர் விஜய் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டாதது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக சட்டசபையில் கேள்வி எழுப்பி கொண்டே இருந்த போதும், ஆளுங்கட்சியான தவெக சார்பாக கடைசி வரை யாரும் பதில் அளிக்கவில்லை.
சட்டசபையில் மேகதாது விவகாரம் தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தவெக அரசு அமைந்ததில் இருந்தே மேகதாது பிரச்சனையில் இதுவரை காட்டாத வேகத்தை கர்நாடகா காட்டி வருகிறது. மேகதாது விஷயத்தில் ஒரேயொரு முறை மட்டும் முதல்வர் விஜய் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.

மேகதாது விவகாரத்தில் ஜூன் 19ஆம் தேதி தவெக அரசு ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. அப்போது நாங்கள் ஒரு குழு டெல்லி சென்று ஒற்றுமையை காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் சொன்னதை அரசு கேட்கவில்லை. அதேபோல் அனைத்து கட்சிக் கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
நாங்கள் மட்டுமல்ல, அனைத்து அரசியல் கட்சிகளும் இதே கருத்தை கூறி வருகிறார்கள். மேகதாது விவகாரத்தில் ஜூன் 11ம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஜூன் 12ல் மத்திய ஜல்சக்தி அமைச்சரை சந்தித்து மேகதாது திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஜூலை 27ல் மத்திய ஜல்சக்தி இணையமைச்சர், மேகதாதுவில் அணை கட்ட கீழ் படுகை மாநிலங்களின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார். அதேநாளன்று கர்நாடகா அனைத்து எம்பிக்கள் கூட்டத்தை அம்மாநில முதல்வர் நடத்தியுள்ளார். பின்னர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். ஆகஸ்ட் 2ஆம் தேதி கர்நாடகாவில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டினார்.
இப்படி ஒவ்வொரு அடியாக கர்நாடகா பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாநில நலன் என்று வந்தால், அரசியல் வேறுபாடுகளை கடந்து ஓரணியில் நிற்கிறார்கள், நாமும் நமது ஒற்றுமையை கர்நாடகா மற்றும் மத்திய அரசுக்கு காட்ட வேண்டும் என்பதால் தான், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வலியுறுத்துகிறோம். விவசாயிகள் மீது அக்கறை உள்ள அரசு இதையெல்லாம் கேட்காமலேயே இதனை செய்திருக்க வேண்டும்.
அனைத்து கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டுவதை தவிர்ப்பது ஏன்.. இந்த அரசு ஒரு புது டெக்னிக்கை பின்பற்றி வருகிறார்கள். எதை செய்தாலும், அவர்களே அந்த விஷயத்தை லீக் செய்துவிடுகிறார்கள். அதற்கு எதிர்ப்பு வந்தால் உடனே யூடர்ன் போட்டுவிடுகிறார்கள் என்று தெரிவித்தார். இதனிடையே உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு சபாநாயகர் மற்றும் அமைச்சர் செங்கோட்டையன் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதன்பின் முதல்வர் விஜய் பதில் அளித்த போதும், அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டாதது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. மாறாக தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் திமுக பங்கேற்குமா என்பதை மட்டுமே அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். வேறு எந்த அமைச்சரும் கூட மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாதது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications
