"அவ்வளவு தூதுவிட்டாங்களே!" தனித்து களமிறங்கும் தவெக.. காங்கிரஸுடன் கூட்டணி இல்லை.. என்ன நடந்தது?
சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி அமைக்கக் காங்கிரஸில் இருந்து சில தலைவர்கள் தொடர்ந்து தூதுவிட்டுக் கொண்டு இருந்தனர். இதனால் திமுக காங்கிரஸ் உறவிலும் சலசலப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கிடையே தமிழ்நாடு தேர்தலில் தனித்து போட்டி எனச் சொல்லி காங்கிரஸுக்கு கேட் போட்டுள்ளார் விஜய்!
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. ஒரு பக்கம் அதிமுக வலிமையான என்டிஏ கூட்டணியை உருவாக்கியுள்ளது. அதிமுக, பாஜக, பாமக, அமமுக எனக் கூட்டணி பலமாக இருக்கிறது. மற்றொரு பக்கம் திமுகவும் தனது கூட்டணியே அப்படியே கொண்டு வருகிறது. புதிதாக வந்த விஜய்க்கு தான் கூட்டணி அமைப்பதில் சிக்கல் இருந்தது.

விஜய்
ஓராண்டிற்கு முன்பே தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என விஜய் அறிவித்திருந்தார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பு தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால் தமிழ்நாட்டில் திமுகவும் சரி, அதிமுகவும் சரி கூட்டணி ஆட்சி என்பதைத் தொடர்ந்தே எதிர்த்தே வந்திருக்கிறது.
இதனால் கூட்டணி ஆட்சி எனச் சொல்வதால் சில கட்சிகள் தங்களுடன் கை கோர்க்கும் என விஜய் எதிர்பார்த்துக் காத்திருந்தார். இருப்பினும், எந்தவொரு கட்சியும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கவில்லை. இந்தச் சூழலில் தான் காங்கிரஸில் இருந்து சில சிக்னல்களை பார்க்க முடிந்தது. காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்யுடன் கூட்டணி அமைக்க விரும்பியுள்ளனர்.
தூதுவிட்ட காங்கிரஸ் தலைகள்
குறிப்பாக ராகுலின் நெருங்கிய வட்டத்தில் இருக்கும் பிரவீன் சக்ரவர்த்தியும் விஜய்யை நேரடியாகச் சந்தித்திருந்தார். அது மட்டுமின்றி தனியார் டிவி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியிலும், விஜய் கட்சி அதிமுகவை ஓவர்டேக் செய்யும் என்றும் கூட கூறியிருந்தார். மேலும், பல நேரங்களில் அவருடைய கட்சிகள் காங்கிரஸ் விஜய் கூட்டணிக்குத் தூது விடுவது போலவே இருந்தது.
அதேபோல காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் கூட்டணி குறித்துப் பேசி வந்தார். கூட்டணி ஆட்சி வேண்டும் என்றும் ட்வீட் செய்து வந்தார். காங்கிரஸ் தலைமை இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும் அதேநேரம் இந்தப் பேச்சுகளைத் தடுக்கவும் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. தமிழ்நாடு காங்கிரஸில் ஓரிருவரைத் தவிரப் பெரும்பாலானோர் தவெகவுடன் கூட்டணிக்கே லாபி செய்வதாகக் கூறப்பட்டது.
டெல்லி தலைமைக்கு விருப்பம் இல்லை
இருப்பினும், டெல்லி தலைமை விஜய்யுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. திமுக வாக்கு வங்கி நிரூபிக்கப்பட்ட ஒன்று, மேலும் பல ஆண்டுகளாகவே திமுகவும் காங்கிரஸும் ஒரே அணியில் இருந்துள்ளது. பல விஷயங்களில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது. அப்படியிருக்கும்போது திமுகவை விட்டுவிட்டு விஜய்யுடன் கூட்டணி அமைப்பது சரியாக இருக்காது என்றே காங்கிரஸ் தலைமை கருதியுள்ளது. இதனால் கூட்டணி கனவு மொத்தமாகக் காலியாகிவிட்டது.
முடிவை மாற்றிய விஜய்
இதை உணர்ந்து கொண்ட பிறகே விஜய் தனது டோனை மாற்ற ஆரம்பித்தார். முதலில் வேறு கட்சிகள் வந்தாலும் ஓகே வரவில்லை என்றாலும் ஓகே தேர்தலில் நம்பிக்கையுடன் வெல்வோம் என்றார். இப்போது அதில் இருந்து ஒருபடி மேலே போய் கூட்டணி இல்லை என்பதையே அறிவித்துவிட்டார்.
இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் சரி, பின்பும் சரி யாருடனும் கூட்டணி இல்லை என்பதை அறிவித்துவிட்டார். காத்திருந்து காத்திருந்து பார்த்த விஜய் எந்த கட்சியும் தன்னுடன் வராததால் சோலோ முடிவை அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications