“உயிர் பலியை நல்ல சகுனம் என கேலி செய்வதா?” நயினார் மட்டுமின்றி திமுகவையும் இழுத்த நாஞ்சில் சம்பத்!
சென்னை: "விஜய்யின் அனைத்து கூட்டங்களிலும் யாராவது உயிரிழப்பது அவர்களுக்கு ஒரு நல்ல சகுனம் தானே?” என்று நயினார் நாகேந்திரன் நக்கல் தொனியில் பேசியதற்கு தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று காலை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர், “தவெக தலைவர் விஜய் கூட்டங்களில் உயிரிழப்புகள் நடந்தது நல்ல சகுனம் தானே” என சிரித்துக் கொண்டே பேசினார்.

நயினார் நாகேந்திரன் நக்கல் தொனி
விஜய்யின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் நடக்கும் அசம்பாவிதங்களை விமர்சிக்கும் வகையில், “விஜய்யின் அனைத்து கூட்டங்களிலும் யாராவது உயிரிழப்பது அவர்களுக்கு ஒரு நல்ல சகுனம் தானே?” என்று நயினார் நாகேந்திரன் நக்கல் தொனியில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நடிகை திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி பலரும் அவரை விமர்சித்து வரும் நிலையில், இப்போது நேரடியாக விஜய்யின் அரசியல் நகர்வுகளையும், உயிரிழப்புகளையும் ஒப்பிட்டுப் பேசியது தவெகவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக கடும் கண்டனம்
இதற்கு தவெக தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது. தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், இன்று தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அறிவாலய கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறிவிட்ட கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு கண்டனம். ஒருவர் உயிரிழந்த நிகழ்வு "நல்ல சகுனம்" என்று கேலி செய்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.
அதிகார மமதை - நாஞ்சில் சம்பத்
அரசியல் நாகரிகம் என்பது எதிரிகளுக்கும் பொதுவானது. ஆனால், அதிகார மமதையில் இருப்பவர்களுக்கும். தங்களை அறிவாலயத்தின் "கொத்தடிமை ஊதுகுழலாக" மாற்றிக்கொண்டு செயல்படும் கமலாலயத்தின் "கள்ளக்கூட்டணி" தலைவர்களுக்கும் மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.
திராவிட மாடல் என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவும், அவர்களுக்கு மறைமுகமாகத் துணை போகும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது இந்த இழிவான கருத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் இந்த "கள்ளக்கூட்டணி" மனநிலை அருவருக்கத்தக்கது.
இழப்பை ஏளனம் செய்வதா?
ஒரு இழப்பை ஏளனம் செய்வது, தமிழக வெற்றிக் கழகத்தின் கோடிக்கணக்கான தம்பிகளின் இதயங்களில் நெருப்பை மூட்டுவதற்குச் சமம். மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற தலைவர்கள். வரும் தேர்தலில் மக்களால் தக்க பாடம் புகட்டப்படுவார்கள்.
அறிவாலயத்தின் ஆணைக்கிணங்க செயல்படும் இத்தகைய ஊதுகுழல்கள், நமது கழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கப் போடும் சதித் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும். மக்களின் துயரத்தில் இன்பம் காணும் இத்தகைய நச்சுக் கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.
நயினார் மன்னிப்பு கேட்க வேண்டும்
தொடர்ந்து கொச்சையான அநாகரீக மனிதாபிமானமற்ற கருத்தை வெளியிட்டு வரும் நயினார் நாகேந்திரன் உடனடியாகத் தனது பேச்சிற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications