திடீர் திருப்பம்.. இந்தியா கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு!
சென்னை: மதவாத, இந்துத்துவ சக்திகளை அகற்ற வேண்டும் என்றால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பரந்தூரில் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள அவர், இந்தியா கூட்டணிக்கு வர விஜய்-க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் வாழப்பாடி ராமமூர்த்தியின் 86வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பாக விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவரது உருவப்படத்திற்கு மரியாதை அளித்தார். இதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது செல்வப்பெருந்தகை பேசுகையில், ஆர்எஸ்எஸ் மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிரான போர்க்குரலாக வாழ்ந்த வாழப்பாடியாரின் 86வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய காலத்தில் ஒருபோதும் மதவாத சக்திகளை கால்பதிக்கவிடக் கூடாது என்று போராடியவர். அவரின் குரல் ஏழைகளின் குரலாக இருந்தது. எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர்.
தொழிற்சங்கவாதியான அவர், தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர். அவருக்கு மலரஞ்சலி செலுத்துவதில் காங்கிரஸ் கட்சி பெருமை கொள்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பரந்தூர் செல்வது தொடர்பான கேள்விக்கு, பரந்தூர், ஏகனாபுரம் ஸ்ரீபெரும்புதூரான எனது தொகுதிக்குள் வருகிறது.
மக்களுக்கு பாதிப்பில்லாமல் அரசின் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லி இருக்கிறேன். 3 ஆண்டுகளுக்கு முன் நடைமுறை செய்வோம் என்று நாடாளுமன்றத்தில் பாஜக அமைச்சர் சொன்ன பிறகு, அந்த திட்டம் அப்படியே தான் இருக்கிறது. ஒரு எம்எல்ஏ-வாக நானும் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறேன். அங்கு வாழ்கிற மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது.
அதுதான் எல்லோரின் விருப்பமும். தலைமுறை தலைமுறையாக வாழ்கிறவர்கள். அதனால் மக்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாட்டில் அமைந்த உரையில் பேசியபடி, இந்துத்துவ மதவாத சக்திகளை அகற்ற வேண்டும் என்று முன்னெடுத்தால் அவர் இந்தியா கூட்டணிக்கு வருவது நல்லது. அவருக்கு, அவரின் கொள்கைக்கும், மக்களுக்கும் நல்லது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications