போலீசாரிடமிருந்து விஜய்க்கு வந்த முக்கிய “நோட்”.. முன்கூட்டியே நிறைவடையும் தவெக மாநாடு!
சென்னை: தவெகவின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்று வரும் நிலையில், தொண்டர்களின் பாதுகாப்பு கருதி இரவு 7 மணிக்கு முன்பாகவே விரைந்து முடிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப, திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே, மாநாடு தொடங்கியது.
தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்று வருகிறது. மாநாட்டுப் பந்தலில் சுமார் 50,000 பேர் அமரும் அளவில் இருக்கை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அதிகாலை தொடங்கி மாநாட்டுப் பந்தலில் தவெக தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர்.

மதியம் 1 மணி அளவில் மாநாடு நடைபெறும் இடத்துக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் குவிந்தனர். மேலும் வெயிலின் தாக்கம் காரணமாக மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் அங்கிருந்த மருத்துவக் குழுவினரால் அளிக்கப்பட்டன.
காலை முதலே தவெக தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் குவிந்துள்ளதால் அவர்களை நீண்ட நேரம் காக்க வைக்கவேண்டாம் என்ற நோக்கில் முன்பு 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட மாநாடு, அதற்கு முன்பாகவே தொடங்கியது.
3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. 4 மணியளவில் மாநாட்டுப் பந்தலில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் தவெக விஜய். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் ரேம்ப்மில் விஜய் தொண்டர்களிடையே கையசைத்தபடியே உற்சாகத்துடன் நடைபோட்டார். விஜய்யை நோக்கி தொண்டர்கள் கட்சி துண்டுகளை வீசிய நிலையில் அவற்றை பெற்று கழுத்தில் போட்டுக்கொண்டார் விஜய்.
தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் மாநாடு தொடங்கியது. கட்சி உறுதி மொழி எடுத்துக்கொண்ட நிலையில், விஜய் கட்சியின் கொள்கைப் பாடல் ஒலிக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் பேசிய பிறகு இறுதியாக மாலை 6 மணிக்கு விஜய் உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பெண்கள், விவசாயிகள், கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே, அதாவது 7 மணிக்குள் தவெக மாநாட்டை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொண்டர்களின் பாதுகாப்பு கருதி இரவு 7 மணிக்கு முன்பாகவே விரைந்து முடிக்க வேண்டும் என தவெக தலைமைக்கு காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கேற்ப, திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாகவே, மாநாடு தொடங்கியது. திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே மாநாடு நிறைவடைய உள்ளது.












Click it and Unblock the Notifications