உபியில் 38% லைக்ஸ், தமிழகத்தில் 1% தான்.. விஜய் வீடியோ மோசடி.. புட்டு புட்டு வைத்த மாரிதாஸ்
சென்னை: விஜய் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். மதுரையில் நடத்திய மாநாடு, கரூர் பிரச்சார கூட்டம் ஆகியவற்றில் ஏராளமான புகார்கள் வெடித்துள்ளன. அதற்கு உரிய பதில் கொடுக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாக புகார் உள்ளது. மதுரை மாநாடு தொடர்பாக விஜய் தன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அதற்கு பணம் கொடுத்து லைக்ஸ் வாங்கியதாக விமர்சனம் எழுந்து வருகிறது. இதற்கு உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 38 சதவீதம் லைக்ஸ்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டில் இருந்து 1 சதவீதம் லைக்ஸ் தான் வந்துள்ளது. எந்தெந்த பகுதியில் இருந்து எவ்வளவு லைக்ஸ்கள் கிடைத்தன என்பது குறித்து மாரிதாஸ் புட்டு புட்டு வைத்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கி அரசியலில் இறங்கியுள்ளார். ஜனநாயகன் படத்துடன் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் கவனம் செலுத்த போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். தவெக தொடங்கி 2வருடங்கள் ஆகிவிட்டன. விஜய் மிகவும் அரிதாக தான் அரசியல் நிகழ்ச்சிகளில் தலைக்காட்டி வருகிறார்.

விஜய் வீடியோ
ஆனால் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். விஜய் கடந்த வாரம் கரூரில் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் விஜய் தவெக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தவெகவினர், விஜய் பொறுப்பற்ற முறையில் இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
மதுரையில் அவர் நடத்திய மாநாட்டின் சர்ச்சையே இன்னும் ஓயவில்லை. தவெக சார்பில் மதுரையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. அப்போது மிகப்பெரிய கம்பம் காரின் மீது விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநாடு தொடர்பாக விஜய் ஒரு வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
உத்தரப்பிரதேசம் பீகாரில் 38%
அதற்கு சுமார் 17.9 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன. இது பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாக விஜய் ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்து வந்தனர். ஆனால், அது இயற்கையாக வந்த லைக்ஸ் கிடையாது, பணம் கொடுத்து பரப்பிய புரொமோஷன் என்று விமர்சனம் எழுந்துள்ளது. அதில் தற்போது மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
யூடியூபரும், வலதுசாரியுமான வெளியிட்டுள்ள வீடியோவில் மாரிதாஸ், "இது ஒரு அரசியல்வாதிக்கு என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை. அந்த வீடியோவை நாங்கள் சர்வே செய்ததில் மத்தியப்பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 38 சதவீதம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர். அவர்களில் எவருக்குமே விஜய் யார் என்று தெரியாது. தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றும் தெரியாது.
தமிழகத்தில் வெறும் 1%
அதற்கு அடுத்து அசாம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து 26 சதவீதம் பேர் லைக்ஸ் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இவர் யாரென்று தெரியாது. இது என்ன நிகழ்ச்சி என்றும் தெரியாது. அவர்களின் புரொபைல் சென்று பார்த்தால் எதற்காக லைக்ஸ் செய்திருக்கிறார்கள் என்றும் புரியாது.
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 18 சதவீதம் பேர் லைக்ஸ் செய்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து 1.02 சதவீதம் பேர் தான் லைக்ஸ் செய்துள்ளனர். இதில் போலியானது எத்தனை என்று தெரியவில்லை. லாட்டரி இணையதளத்தில் ரூ.40 - 50 லட்சம் வரை செலவு செய்துள்ளனர். குறைந்தபட்சம் ரூ.10,000 கட்டினால் 50,000 லைக்ஸ்கள் கிடைக்கும்.
பணம் கொடுத்தால் லைக்ஸ்
இதற்காக இன்ஸ்டாகிராமில் உள்ளூர் தொடங்கி சர்வதேசம் வரை பல நிறுவனங்கள் இயங்கி வருகிறார்கள். இதேபோல டெலிகிராம், வாட்ஸப்பிலும் காசு கொடுத்து லைக் வாங்குவதற்காக ஒரு கும்பல் உள்ளது. இப்படி உள்ள பல நிறுவனங்களிடம் பணம் கொடுத்து வளைத்து வளைத்து லைக்ஸ் வாங்கியுள்ளனர். அவற்றில் மத்தியப்பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் இருந்து மட்டும் தான் அதிக லைக்ஸ் வந்துள்ளது.
அரசியலில் வருவதற்கு முன்பே விஜய் மிகப்பெரிய மோசடி செய்கிறார். இதற்காக அவர் மீது வழக்கே போடலாம். நான் முதலமைச்சராக இருந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுத்திருப்பேன்." என்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக உள்ளிட்ட கட்சிகள் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications