விஜய் அடுத்த பிரதமரா.. கனிமொழி ரசிக மனப்பான்மையில் சொல்றாங்க.. தாரகை கத்பர்ட் தரமான பதிலடி!
சென்னை: தவெக எம்எல்ஏ-க்கள் ரசிக மனப்பான்மையில் விஜய் தான் அடுத்த பிரதமர் என்று பேசுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் தெரிவித்துள்ளார். தவெக எம்எல்ஏ-க்கள் புதியவர்கள், அதனால் அவர்கள் பேசுவதில் எந்த தவறும் கிடையாது என்று கூறிய தாரகை கத்பர்ட், அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என்பதில் விஜய் தெளிவாக இருப்பதாக கூறியுள்ளார்.
சட்டசபையில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சரத் குமார் தொடங்கி பொது மேடைகளில் தவெக அமைச்சர்கள் அனைவரும் அடுத்த பிரதமர் விஜய் என்று பேசி வருகின்றனர். அதற்கேற்க வட மாநிலங்களில் முதல்வர் விஜய் குறித்து பல்வேறு ரீல்ஸ் வெளியிடப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் தவெக சார்பாக சோசியல் மீடியா பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன் உச்சமாக இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் அடுத்த பிரதமர் வேட்பாளர் ரேஸில் விஜய்க்கு 9% ஆதரவு இருப்பதாக தெரிய வந்தது. இதனால் தவெக மற்றும் காங்கிரஸ் இடையிலான உறவில் சிக்கல் எழுந்துள்ளதாக பார்க்கப்பட்டது. மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி இருவரும் முதல்வர் விஜய்யை நேரில் சென்று சந்தித்து சில ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
அதேபோல் சட்டசபையில் காங்கிரஸ் சட்டசபைக் குழு தலைவர் தாரகை கத்பர்ட் எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தொடங்கினார். இப்படியான சூழலில் தவெக எம்எல்ஏ கனிமொழி பேசுகையில், 2026ல் எப்படி முதல்வர் நாற்காலியில் விஜய்யை ராகுல் காந்தி அமர வைத்தாரோ, அதேபோல் 2029ல் பிரதமர் நாற்காலியில் விஜய் கைபிடித்து ராகுல் காந்தி அமர வைப்பார் என்று தெரிவித்தார்.
இது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சட்டசபைக்கு வெளியில் காங்கிரஸ் சட்டசபைக் குழு தலைவர் தாரகை கத்பர்ட் பேசுகையில், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர் ராகுல் காந்தி தான். அது நாடு முழுவதும் தெரியும். விஜய் இதுவரைக்கும் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்பதில் தெளிவாக இருக்கிறார்.
தவெக எம்எல்ஏ-க்கள் அனைவரும் புதியவர்கள்.. அவர்கள் இன்னும் ரசிக மனப்பான்மையோடு இருக்கிறார்கள். தவெகவினர் அந்தக் கட்சியின் தலைவரை தான் சொல்வார்கள். அதில் எந்த தவறும் கிடையாது. அதனை எந்த யூகங்களுக்கும் இடம்கொடுக்க தேவையில்லை. ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்பதை முதல்வர் விஜய் தெளிவாக கூறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
