அரசு ஊழியர்களை ஆயாவாக மாற்றிய தவெக எம்எல்ஏ பல்லவி.. குழந்தையை பார்த்துக்க ஆள் இல்லையா?
சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் கடந்துவிட்டன. முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். திருவிக நகர் தவெக எம்எல்ஏ பல்லவி அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் கைக்குழந்தையுடன் கலந்து கொள்வது பெரும் சர்ச்சையாகி வருகிறது. விஜயே கண்டித்தும் அவர் திருந்தவில்லை. அரசு நிகழ்ச்சிகளில் அவரின் குழந்தைகளை அரசு ஊழியர்களை வைத்து பராமரிப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதற்கு முந்தைய தேர்தல்களில் சென்னை மாவட்டம் திமுகவின் கோட்டையாக இருந்தது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. திமுக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

கைக்குழந்தையுடன் பல்லவி
தவெக மக்கள் பிரநிதிகளின் செயல்பாடுகள் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் பல்லவி என்பவர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார். மே இறுதியில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தமிழ் வெற்றி கொண்டான் (தவெக) என பெயரிட்டார். சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கைக்குழந்தையுடன் கலந்து கொண்டு வருகிறார்.
இது பெரும் விவாதமானது. "பொது வாழ்க்கையில் பெண்கள் இருப்பதே ஆச்சர்யம். குழந்தையுடன் பணிக்கு வருவது வரவேற்கத்தக்கது" என்று தவெகவினர் கூறினர். அதே நேரத்தில், "பச்சிளம் குழந்தையுடன் அனைத்து இடங்களுக்கும் செல்வது சரியான அணுகுமுறை இல்லை. இது தவறான முன் உதாரணமாகிவிடும். குழந்தையை அசௌகரியப்படுத்த கூடாது. முதலமைச்சர் விஜய் பல்லவிக்கு அறிவுறுரை வழங்க வேண்டும்" என்று கருத்துகள் கூறப்பட்டது.
மீண்டும் மீண்டும் சர்ச்சை
தவெக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் எம்பி கார்த்தி சிதம்பரம், "பல தாய்மார்கள் குழந்தைகளை வைத்து கொண்டு பணி செய்கிறார்கள். பணிபுரியும் பெற்றோருக்கு குழந்தைக்கான பராமரிப்பு மையம் தேவை. அரசு, தனியார் நிறுவனங்கள் 6 மாதம் மகப்பேறு விடுப்பு கொடுக்கப்படுகிறது. அதை நான் ஆதரிக்கிறேன். குழந்தைகளை அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வைப்பது ஆரோக்கியத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தலாம்" என்றார்.
ஆனாலும் பல்லவி கேட்கவில்லை. அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பச்சிளம் கை குழந்தையுடன் கலந்து கொள்கிறார். மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் பல்லவி குழந்தையுடன் கலந்து கொண்டார். அப்போது விஜயே அவரை கண்டித்தார். அதன் பிறகும் பல்லவி திருந்தவில்லை. சென்னை மாநகராட்சியில், வளர்ச்சி குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தவெக எம்எல்ஏவும் பல்லவி கலந்து கொண்டார். வழக்கம் போல குழந்தையுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் எம்பிகள் பிரவீன் சக்ரவர்த்தி, தயாநிதி மாறன், எம்எல்ஏ சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அரசு ஊழியர்கள்
பல்லவி அரசு நிகழ்ச்சிகளில் குழந்தையுடன் வந்தாலும், முழுமையாக அவர் குழந்தையை பராமரிப்பதில்லை. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு அரசு ஊழியர்களிடமே ஒப்படைக்கப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்சியிலும் பல்லவியின் குழந்தையை அரசு ஊழியர்களே கவனித்து கொண்டனர். "பொது நிகழ்ச்சிகளுக்கு பல்லவி தன் குழந்தையை அழைத்து வருவதன் மூலம் அரசியலில் விளம்பரம் தேடுகிறார். இதற்கு அரசு ஊழியர்களை பயன்படுத்துவது மிகவும் தவறு இதை நிறுத்த வேண்டும். தன் குழந்தையை தனி பராமரிப்பாளரை வைத்துதான் கவனிக்க வேண்டும். மக்கள் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களை பகடைக்காய் ஆக்க கூடாது" என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
