முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்: வாழ்த்து சொன்ன தவெக தலைவர் விஜய் ! போனில் அழைத்த ரஜினிகாந்த்!
சென்னை: 72வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி திமுகவினர் பல்வேறு நலத் திட்ட உதவிகளைச் செய்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் தொடங்கிய வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதன் பிறகு மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான கருணாநிதி, அண்ணா ஆகியோரின் நினைவிடங்கள் மற்றும் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று தமது 72வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதில் நாம் தொடர்ந்து ஒன்றாக நிற்போம். எனது சகோதரர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழ்நாடு மக்களுக்குச் சேவை செய்ய வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதிலும் ஜனநாயக கொள்கைகளை நிலைநிறுத்துவதிலும் ஒன்றாக பயணிப்போம். நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். "தங்களுக்கு என் அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தலைமையில் தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் திசைகளிலும் முன்னேறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நலமுடன் நல்லாட்சி நடத்துக!" எனத் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில், "தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 72-ஆம் பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "72ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் அனைத்து நலன்களுடன் நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்." எனப் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த், தொலைபேசி வாயிலாக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications