“தவெக அமைச்சரவையில் இடம்பெறுவோம் என நாங்க சொல்லவே இல்லை”: பின்வாங்கிய எஸ்பி வேலுமணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நாங்கள் எந்தவொரு பதவி ஆசையிலோ அல்லது அமைச்சர் நாற்காலிக்காகவோ தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஒரு முறைக்கூட அமைச்சரவையில் இடம்பெறுவோம் எனக் கூறவில்லை" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் பல்வேறு அதிரடி திருப்பங்களைக் கண்டு வரும் நிலையில், தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு இடம் கிடைக்காதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

SP Velumani

தவெகவுக்கு ஆதரவும் - அதிமுக பிளவும்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சி அமைக்க தவெக-வுக்குப் பெரும்பான்மை தேவைப்பட்ட சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக-வை ஆதரிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

ஆனால், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள், தவெக அரசுக்கு ஆதரவாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். "திமுக-வை வீழ்த்தவே எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தைத் தொடங்கினார்; ஆனால் தவெக-வுக்கு எதிராக திமுக-வுடன் கைகோர்க்க இ.பி.எஸ் முயன்றார்" எனக் குற்றம் சாட்டி, வேலுமணி தரப்பு தவெக அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டியது.

அமைச்சரவையில் இடம் மறுப்பு - பின்னணி என்ன?

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவளித்ததால், எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கு தவெக அமைச்சரவையில் 6 முதல் 8 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பலத்த ஊகங்கள் உலா வந்தன. ஆனால், சமீபத்தில் நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, காங்கிரஸ் மற்றும் தவெக எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இன்று விசிக மற்றும் ஐயுஎம்எல் சார்பில் அமைச்சர்கள் பதவியேற்றனர். வேலுமணி தரப்பிற்கு ஒரு இடம் கூட வழங்கப்படவில்லை.

தமிழக அமைச்சரவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 35-க்கு மேல் இருக்கக் கூடாது. தவெக ஏற்கனவே 31 அமைச்சர்களையும், காங்கிரஸ் 2 அமைச்சர்களையும் கொண்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்கள் கூட்டணிக்கு ஆதரவளித்த விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.

அதிகாரப்பூர்வ அழைப்பு இல்லை

நேற்று நடந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பிற்குத் தவெக தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வ அழைப்பும் அனுப்பப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. அமைச்சரவையில் இடம் அளிக்கப்படாத நிலையில் வேலுமணி - சிவி சண்முகம் தரப்பு எம்.எல்.ஏக்கள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர்.

பதவிக்காக வரவில்லை - சுதாரித்த வேலுமணி தரப்பு

தவெக அமைச்சரவையில் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்காதது குறித்துப் பேசிய வேலுமணி தரப்பு மூத்த தலைவர் ஒருவர், "நாங்கள் தவெக ஆட்சியில் இணையப் போவதாக எங்கேயும், எப்போதும் பொதுவெளியில் கூறவில்லை. பதவி ஆசையில் நாங்கள் தவெக-வை ஆதரிக்கவும் இல்லை" என்று தற்போதைய சூழலைச் சமாளிக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஏமாற்றம் ஏமாற்றம் எனக்கூறுகிறார்கள். தவெகவுக்கு ஆதரவு தான் என்பதை தெளிவுபடுத்தினோம். அமைச்சரவையில் இடம் பெறுவோம் என நாங்கள் ஒருமுறை கூட கூறவில்லை.

வேலுமணி பேட்டி

சிலர் திட்டமிட்டு இதே கருத்தை கூறி வருகின்றனர். ஏமாந்து விட்டதாக சமூகவலைதளங்களில் சிலர் தொடர்ந்து திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். பதவிக்கு ஆசைப்பட்டு தவெகவுக்கு ஆதரவு தரவில்லை. திமுக எதிர்ப்பு என்பதற்காகவே தவெகவிற்கு ஆதரவு அளித்தோம். புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களின் ஒரே நோக்கம் அதிமுக-வின் பொதுக்குழுவைக் கூட்டி, தேர்தல் தோல்விகள் குறித்து விவாதிப்பது மட்டுமே என்றும், தங்களைச் சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தூதுவர்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் கணக்கு

தவெக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவிட்டு, தற்போது அமைச்சரவையிலும் இடம் கிடைக்காமல், அதிமுக கொறடா உத்தரவை மீறியதாக ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளும் இக்கட்டான சூழலில் வேலுமணி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் சிக்கியுள்ளனர்.

அமைச்சரவையில் இடம் கிடைக்காததால், அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கே திரும்புவதற்கான சமரசப் பேச்சுவார்த்தைகளும் திரைமறைவில் வேகம் எடுத்துள்ளதாகத் தமிழக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+