ரெடியான செயலி.. திமுக ஸ்டைலில் வீடு வீடாகச் செல்லப்போகும் தவெக.. அவசர மீட்டிங் போடும் விஜய்!
சென்னை: நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் தவெக சார்பாக உருவாக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கை செயலில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், அதனைப் பயன்படுத்த ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்காகத் தமிழக வெற்றிக் கழகம் வேகமாகத் தயாராகி வருகிறது. அடுத்த கட்டமாக 2வது மாநில மாநாட்டை மதுரை எலியார்பத்தியில் நடத்த தவெக ஆயத்தமாகி வருகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி தவெக மாநாடு நடக்க உள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்களும் தீவிரமாகத் தயாராகி வருகிறார்கள். விக்கிரவாண்டி மாநாட்டை விட ஒருபடி மேல் இருக்க வேண்டும் என்பதில் விஜய் குறியாக இருக்கிறார்.

தவெக மதுரை மாநாடு
அதற்காகவே 40 நாட்களுக்கு முன்பாகவே அறிவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரையில் நடக்கும் மாநாடு என்பதால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு தவெக சார்பாக பல்வேறு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாளை மறுநாள் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செயலி அறிமுகம்
பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. அதேபோல் மாநாட்டில் செய்யப்பட வேண்டிய விவரங்கள் குறித்து தவெக தலைமை சில அறிவுறுத்தலை அளிக்கப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல் தவெகவுக்காக புதிய செயலியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.
வீடு வீடாகச் செல்லும் தவெக
அதாவது தவெக சார்பாக உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த செயற்குழு கூட்டத்திலேயே அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வார்டிலும் வீடு வீடாகச் சென்று தவெக சார்பாக உறுப்பினர் சேர்க்கையில் நிர்வாகிகள் ஈடுபட இருக்கிறார்கள். இதற்காகக் கட்சித் தலைமை பிரத்யேக தலைமை செயலி ஒன்றை வடிவமைத்துள்ளது.
விஜய் மீட்டிங்
மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செயலியைப் பயன்படுத்த நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்பின் திமுக ஸ்டைலில் தவெகவினரும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட உள்ளதாகப் பார்க்கப்படுகிறது. மேலும் மதுரை மாநாட்டில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது தொடர்பாகவும் பேசப்பட உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அதிமுக - தவெக கூட்டணி?
அதேபோல் அதிமுக தரப்பில் தவெகவுடன் கூட்டணி வைக்க சிக்னல் கொடுக்கப்பட்டு வருகிறது. தவெகவும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக பார்க்கப்படும் நிலையில், கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றங்கள் நிகழுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக என்பது குறித்தும் ஆலோசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications