பிப்ரவரி 6ல் தொடங்கும் தவெக விருப்ப மனு விநியோகம்.. கட்டணம் எவ்வளவு? மீண்டும் சொதப்பிய விஜய்!
சென்னை: பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 14 வரை தவெக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விருப்ப மனுக்கான கட்டணம் குறித்த தகவல் வெளியிடப்படாததால், அக்கட்சியினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சூழலில், அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். ஏற்கனவே அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து, தொகுதிப் பங்கீடு முடிவை எடுத்துவிட்டது.

அதேபோல் வேட்பாளர்களுக்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணலையும் நடத்திவிட்டது. அதிமுக மட்டுமல்லாமல் பாமக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த பணிகளை முடித்துவிட்டன. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக களமிறங்க உள்ள தவெகவும் விருப்ப மனு விநியோகத்தை தொடங்க உள்ளது.
பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 14 வரை தவெக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தவெக நல்லாட்சியை வழங்கும் நோக்கில் விஜய் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது.
இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும். அந்த வகையில், வருகின்ற சட்டசபைத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம்.
தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 வெள்ளிக்கிழமை முதல் 14.02.2026 சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.
பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விருப்ப மனுக்களுக்கான கட்டணம் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் விருப்ப மனு ரூ.50 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விருப்ப மனு கட்டணம் குறித்த தகவல் இடம்பெறாததால், அக்கட்சியினர் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications