என்னை நம்பி வந்து கடனாளி ஆகக்கூடாது.. தவெக வேட்பாளர்களுக்கு விஜய் கொடுக்கும் விட்டமின் "M"
சென்னை: தவெக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விஜய் தரப்பில் இருந்து தேர்தல் செலவுக்காக விட்டமின் M கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு வேட்பாளரும் தங்களால் செலவு செய்ய முடியக் கூடிய தொகையை கட்சித் தலைமைக்கு கூறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தவெக மாவட்டச் செயலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், தவெக இன்னும் தேர்தல் பணிகளையே தொடங்காமல் இருக்கிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, விருப்ப மனு, மண்டல மாநாடு, மகளிர் மாநாடு, பிரச்சாரத் திட்டம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு என்று திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

ஆனால் தவெக தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் விழாவுக்கு பின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸில் பிசியாக இருக்கிறார். ஆனாலும் ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் திடீரென விஜய் கட்சியில் இணைந்துள்ளார். அதேபோல் செங்கோட்டையன் மூலமாக தவெக தொடர்ந்து லைம்லைட்டிலேயே இருக்கிறது. இதனால் தவெகவின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தவெக தலைவர் விஜய், வேட்பாளர்களாக மாவட்டச் செயலாளர்கள் அத்தனை பேரும் போட்டியிடுவது உறுதி என்று பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள் கைகாட்டுபவரே வேட்பாளர் என்ற மனநிலையில் விஜய் உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணிக்கு போக தவெக தரப்பில் குறைந்தது 180 தொகுதிகள் வரை போட்டியிடலாம் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் தரப்பில் இருந்து ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தவெக சார்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்று தவெக தலைமையிடம் கூறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த செலவு போக, விஜய் தரப்பில் இருந்து தேர்தல் செலவுக்கு விட்டமின் M கொடுக்கப்படும் என்று கூறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தன்னை நம்பி அரசியலுக்கு வந்துள்ள எந்த ரசிகரும் தேர்தலால் பணத்தை அதிகமாக இழந்துவிடக் கூடாது என்று விஜய் கூறியதாக அக்கட்சியினர் கூறுகின்றனர். இதனால் மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் செங்கோட்டையன் தரப்பில் இருந்து அழைக்கப்படும் சில நிர்வாகிகளுக்கும், தேர்தல் செலவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்றே சொல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தைரியமாக முன்னாள் எம்எல்ஏ-க்கள் பலரும் தவெகவில் இணைய சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் சட்டசபைத் தேர்தலின் போது திமுக, அதிமுகவுக்கு நிகராக தவெக நிர்வாகிகளால் செலவு செய்ய வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக தேர்தல் களமும் சூடுபிடித்துள்ளது.












Click it and Unblock the Notifications