விஜய்க்கு முளைத்த புதிய சிக்கல்.. பெரம்பூர் தொகுதி வாக்காளர் சென்னை ஐகோர்ட்டில் திடீர் வழக்கு
சென்னை: தவெக தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் குறித்து முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து இருக்கிறார் என்றும், இது தொடர்பாக வருமான வரித்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு ஒரு வாரம் கூட இல்லை. வரும் வியாழக்கிழமை இதே நேரம் தேர்தல் வாக்குப்பதிவே முடிந்து இருக்கும். பிரசாரம் செய்ய நாட்கள் குறைவாகவே இருப்பதால் அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விஜய் சொத்து விவரம்
இந்த தேர்தலில் புதுமுகமாக களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களும் தீவிரமாக ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். தவெக தலைவர் விஜய்யும் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதால் அங்கும் பிரசாரம் மேற்கொண்டார். பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வரும் விஜய், தான் போட்டியிடும் தொகுதியான பெரம்பூரில் மீண்டும் ஒரு நாள் பிரசாரம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் சொத்து விவரங்கள் முன்னுக்கு பின்னாக இருப்பதாகவும், எனவே அது குறித்து வருமான வரி சோதனை நடத்த வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை பெரம்பூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சொத்து விவரங்களில் குழப்பம்
நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய் தமிழக சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த 2 தொகுதிகளிலும், நடிகர் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் உள்ள விவரம் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், தனது சொத்து மதிப்பு ரூ. 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் என்று கூறியுள்ளார்.
ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்து மதிப்பு ரூ. 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் என்று கூறியுள்ளார். அதாவது திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் கூறியுள்ள சொத்துக்களின் மதிப்பை விட பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு குறைவாக இருக்கிறது. இதுகுறித்து விஜய் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
வருமான வரித்துறை விசாரணை வேண்டும்
எனவே விஜய்யின் இந்த செயலானது உண்மைத் தகவலை மறைப்பதற்கு சமம் ஆகும். அவர் தாக்கல் செய்து இருக்கும் 2 வேட்புமனுக்களில் உள்ள சொத்து விவரங்களில் எது சரியானது? முழுமையாக தாக்கல் செய்து இருக்கிறாரா? சொத்துக்களின் விவரங்கள் உண்மையானது தானா? என்ற கேள்வி எழுவதால் இதனை உறுதி செய்யும் விதமாக வருமான வரித்துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
மேலும் இதன் விசாரணை அறிக்கையை, தேர்தலுக்கு முன்பாக பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் வெளியிட பெரம்பூர் மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.. என்று அவர் மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
தவெக தலைவர் விஜய் வேட்பு மனுவில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இருப்பதாக துவக்கத்தில் இருந்தே பரபரப்பு கிளம்பிய போதிலும் பரிசீலனையில் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளபட்டது. ஆனாலும் தற்போது பெரம்பூர் தொகுதி வாக்காளர் ஒருவரே சென்னை ஐகோர்ட்டில் விஜய் வேட்பு மனு தொடர்பாக வழக்கு தாக்கல் செய்திருப்பது விஜய்க்கு புது சிக்கலை ஏற்படுத்தி உள்ளதாக பார்க்கப்படுகிறது.














Click it and Unblock the Notifications