இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. விஜய்யை பேட்டி எடுத்தவரின் பேட்டி வெளியீடு.. என்ன நடந்தது?
சென்னை: அண்மையில் என்டிடிவி தொலைக்காட்சியில் தவெக தலைவர் விஜய்யை பேட்டி எடுத்தவரின் பேட்டி வெளியாகி இந்திய தொலைக்காட்சிகளில் புதிய டிரெண்ட்டை உருவாக்கியது. தற்போது அதே பாணியில் இந்தியா டுடே தொலைக்காட்சியிலும் விஜய்யை பேட்டி எடுத்தவரின் பேட்டி வெளியாகி இருக்கிறது. அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். வழக்கமாக தமிழ்நாட்டில் எந்தக் கட்சி தொடங்கப்பட்டாலும் அந்தக் கட்சி தோன்றியதற்கான நோக்கம், கொள்கை, இலக்கு உள்ளிட்டவை குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார்கள். மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்ட போதும் கமல்ஹாசன் நேரடியாக பிரஸ் மீட் வைத்து விளக்கம் கொடுத்தார்.

செய்தியாளர்களை சந்திக்காத விஜய்
ஆனால் விஜய் அறிக்கை வாயிலாக மட்டுமே தொண்டர்களுடன் பேசினார். விக்கிரவாண்டி மாநாடு, தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா, மக்கள் சந்திப்பு பயணம், மதுரை மாநாடு, ஈரோடு, புதுச்சேரி, சேலம் பொதுக்கூட்டம் என்று விஜய் பல்வேறு நிகழ்ச்சிகளில் சந்தித்து பேசி வருகிறார். ஆனால் இதுவரை ஒருமுறை கூட செய்தியாளர்களை சந்திக்கவில்லை.
பேட்டி எடுத்தவரின் பேட்டி
கடந்த வாரத்தில் என்டிடிவியின் கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அத்தனை கட்சியினரும் அங்கு வந்து தங்களின் கருத்துக்களை பகிர்ந்தனர். ஆனால் விஜய் அங்கு வராமல், என்டிடிவி குழுவினரை பனையூருக்கு அழைத்து சந்திப்பு நடத்தினார். அப்போதும் கேமரா முன் விஜய் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
ஊடகங்கள் ஷாக்
கேமராவுக்கு பின்னணியில் பல்வேறு கருத்துக்களை விஜய் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதனால் விஜய்யை பேட்டி எடுத்தவரின் பேட்டியை என்டிடிவி தொலைக்காட்சி வெளியிட்டது அதிர்ச்சி கொடுத்தது. தற்போது அதே பாணியை இந்தியா டுடே தொலைக்காட்சியும் பின்பற்றி இருக்கிறது. விஜய்யை பேட்டி எடுத்தவரின் பேட்டியை வெளியிட்டுள்ளது.
விஜய் பேட்டி
அந்த பேட்டியில் விஜய் சொல்லியதாக இந்தியா டுடே தொலைக்க்காட்சியின் நிருபர் பேசுகையில், இந்தியா கூட்டணி மற்றும் என்டிஏ கூட்டணி என்று எதிலும் இணைய மாட்டோம். தனித்து பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உள்ளது. தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். வாக்குகளை பெற பணம் கொடுக்கிறார்கள்.
30 நிமிடங்கள் சந்திப்பு
ஆனால் மக்கள் பணத்தை பெற்றுக்கொண்டு, விசில் சின்னத்திற்கு வாக்களிப்பார்கள். கொரோனா பரவலின் போதுதான் அரசியலுக்கு வரும் முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். விஜய்யுடன் இந்தியா டுடே தொலைக்காட்சியின் செய்தியாளர் சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications