கொந்தளித்த விஜய்.. “பாசிச திமுக அரசு.. வாக்குறுதியை நிறைவேத்த முடியாதுன்னா ஏன் கொடுக்குறீங்க” கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம் எனத் தெரிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய்.

சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராட்டம் நடத்தி வந்தனர். 13 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

TVK Vijay Slams DMK Over Arrest of Striking Sanitation Workers

இரவோடு இரவாக தூய்மை பணியாளர்கள் கைது

இதற்கிடையே, இந்தப் போராட்டம் அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் நடப்பதாகவும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பித்த நிலையில், நள்ளிரவு சுமார் 12 மணியளவில் 600க்கும் அதிகமான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். கைதாக மறுத்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கி பேருந்தில் ஏற்றினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தூய்மைப் பணியாளர்கள் இரவோடு இரவாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

விஜய் கண்டனம்

தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்!

குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

தேசவிரோதிகளா? - விஜய்

கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

ஏன் வாக்குறுதி கொடுக்கிறீர்கள்?

எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை? அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?

அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+