லாஸ்ட்டா ஒரு டைம்.. விஜய் எடுத்த முக்கிய முடிவு.. களமிறக்கப்பட்ட டீம்.. தவெகவின் முக்கியமான மூவ்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.. தவெக கட்சிக்கு உள்ள மக்கள் ஆதரவு தொடர்பாக முக்கியமான சர்வே ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசி கட்டமாக உண்மையில் கட்சிக்கு எவ்வளவு மக்கள் ஆதரவு உள்ளது என்று விஜய் சர்வே எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர் vs அரவிந்த் கெஜ்ரிவால்: விஜய் எந்தப் பாதை?
சமீபத்தில் பீகார் அரசியலில் களமிறங்கிய தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் 'ஜன சுராஜ்' இயக்கம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினாலும், அவை வாக்குகளாக மாறவில்லை. பல ஆண்டுகளாக பீகாரில் ஊறிப்போயுள்ள சாதிய அரசியலையும், ஆளும் கட்சிகளின் வலுவான கட்டமைப்பையும் உடைப்பது எவ்வளவு கடினம் என்பதற்கு பிரசாந்த் கிஷோர் ஒரு உதாரணம். அரசியல் தெரிந்தும் கூட அவரால் வெற்றிபெற முடியவில்லை. இதனால் அவர் தேர்தலிலும் போட்டியிடவில்லை.
அதே சமயம், ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால், நேரடியாக அரசியலில் இல்லாமலே.. ஒரே ஒரு போராட்டத்தின் மூலம் உருவெடுத்து, டெல்லி அரசியலில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார். தற்போது விஜய், பிரசாந்த் கிஷோரைப்போல வெறும் மாற்றத்திற்கான குரலாக மட்டும் நின்றுவிடுவாரா அல்லது கெஜ்ரிவாலைப் போல அதிகாரத்தைக் கைப்பற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகம் என்பது சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது அதிகாரத்தின் அடித்தளமாகவும் இருக்கும் ஒரு மாநிலம்.
மற்ற நடிகர்களிடமிருந்து விஜய் எங்கே வேறுபடுகிறார்?
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்து முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தனர். ஆனால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்களின் அரசியல் பயணம் அவர்களுக்குக் கிடைத்த சினிமா புகழுக்கு நிகரான வெற்றியைப் பெற்றுத்தரவில்லை.
கமல்ஹாசன்: 2018-ல் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கினார். ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இறுதியில் திமுக கூட்டணியில் ஐக்கியமாகி எம்பி ஆனார்.
ரஜினிகாந்த்: கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்துவிட்டு, பின்னர் உடல்நிலை மற்றும் பிற காரணங்களால் பின்வாங்கினார்.
விஜய்யின் தனித்துவம்: விஜய் தனது 33 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிட்டு, 'ஜன நாயகன்' படமே தனது கடைசிப் படம் என அறிவித்துள்ளார்.
விஜய்யின் பலம் அவரது கட்டுக்கோப்பான ரசிகர்கள் மன்றங்கள். 2021 உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு 115 இடங்களில் வென்றதாக கூறப்படுகிறது. தவெக-வின் அடிமட்ட பலத்தைக் காட்டுகிறது. ரத்த தான முகாம்கள், இலவச மருத்துவ முகாம்கள் என இவர்கள் சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், அரசியலில் கட்சியை நடத்துவது என்பது வேறு, அதைக் கூட்டணிக் கணக்குகளாகவும் வாக்குகளாகவும் மாற்றுவது என்பது வேறு.
கரூர் நெரிசல்: ஒரு சறுக்கல்?
கடந்த செப்டம்பர் மாதம் கருப்பூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது கட்சிக்கு ஒரு கரும்புள்ளியாக மாறியுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி 19-ஆம் தேதி கூட விஜய் டெல்லி சி.பி.ஐ தலைமையகத்தில் ஆஜராகி 6 மணி நேரம் விளக்கம் அளித்தார். இந்த வழக்கை ஆளும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப் பார்க்கின்றன.
2026: ஒரு முக்கோணப் போட்டி?
தமிழக அரசியல் களம் தற்போது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களைச் சுற்றியே சுழல்கிறது. விஜய்யின் வருகை இந்த இரு கட்சிகளுக்குமே ஒரு சவாலாக அமைந்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்குகளை விஜய் பிரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது."ஊழலற்ற அரசியலை முன்னெடுப்போம், ஒரு பைசா கூடத் தொடமாட்டேன்" என உறுதிபடக் கூறும் விஜய், யாரிடமும் சமரசம் செய்து கொள்ளாமல் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
திரையரங்கில் ஒரு படம் 'ஹிட்' ஆவதைத் தீர்மானிப்பது பாக்ஸ் ஆபீஸ் வசூல்; ஆனால், விஜய்யின் அரசியல் பயணம் 'ஹிட்' ஆகுமா என்பதை 2026 தேர்தல் முடிவுகள் தான் தீர்மானிக்கும்.
கடைசியாக ஒரு சர்வே
இப்படிப்பட்ட நிலையில்தான் விஜய்.. தவெக கட்சிக்கு உள்ள மக்கள் ஆதரவு தொடர்பாக முக்கியமான சர்வே ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடைசி கட்டமாக உண்மையில் கட்சிக்கு எவ்வளவு மக்கள் ஆதரவு உள்ளது என்று விஜய் சர்வே எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
கடைசி கட்டமாக உண்மையில் நமக்கு எவ்வளவுதான் பலம் இருக்கிறது என்று தனியார் நிறுவனம் ஒன்றை வைத்து சர்வே எடுக்க உள்ளாராம். சர்வே எடுப்பதில் பிரபலமான தனியார் அமைப்பு ஒன்று.. இந்த சர்வேவை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications