ஓபிஎஸ், டிடிவி தினகரன்.. பொங்கலுக்கு விஜய் போடும் கணக்கு.. செங்கோட்டையன் மூலம் கேம் ஆடும் தவெக!
சென்னை: தவெக தலைவர் விஜய் தலைமையை ஏற்க ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இரு தரப்புடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், பொங்கல் பண்டிகைக்கு பின் முடிவை அறிவிக்க உள்ளனர். இது விஜய்க்கு கூடுதல் மைலேஜை கொடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
தவெகவில் செங்கோட்டையன் இணைவதற்கு முன்பாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இவர்கள் மூவரும் அதிமுகவை ஒருங்கிணைப்போம் என்று கூறி வந்த சூழலில், திடீரென செங்கோட்டையன் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்து கொண்டார். இதன்பின் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் தவெகவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார்.

அதேபோல் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தவெக தலைவர் விஜய் நேரடியாக அல்லாமல் செங்கோட்டையன் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் மூலமாக மேற்கொண்டு வருகிறார். ஆதவ் அர்ஜுனா காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதும், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் தவெக தலைமையில் சிறிய கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் விஜய் தீவிரமாக உள்ளார்.
அந்த வகையில் செங்கோட்டையன் மூலமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் தவெகவுடன் செல்லலாம் என்பதே நிர்வாகிகளின் எண்ணமாக இருந்துள்ளது. அதேபோல் டிடிவி தினகரனும் கடந்த சில வாரங்களாகவே விஜய்யை பாராட்டி வருகிறார்.
இன்னொரு பக்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இருவருமே சாடி வருகின்றனர். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வருவதன் மூலமாக விஜய் முக்கிய கணக்கு ஒன்றை போட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது இருவருமே முக்குலத்தோர் அடையாளமாக இருப்பதால், இவர்கள் மூலமாக முக்குலத்தோர் சமூக வாக்குகளை குறி வைக்கலாம் என்று கணக்கு போட்டுள்ளனர்.
அதற்கேற்ப லோக்சபா தேர்தலில் இவர்கள் மூலமாக பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்ததையும் விஜய் அறிந்திருக்கிறார். தென் மாவட்டங்களில் தவெக நிர்வாகிகள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் மற்றும் கோஷ்டி பூசல் இருப்பதால், சில தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை முன்னிறுத்துவதும் சரியாக இருக்கும் என்று தவெக கணித்திருக்கிறது.
விஜய், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் கூட்டணி அறிவிப்பு பொங்கலுக்கு பின் வெளியாகலாம் என்று தெரிகிறது. விஜய்க்கு ஜோசியத்தில் நம்பிக்கை இருப்பதால், மார்கழி மாதத்தில் கூட்டணி அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்று கருதுகிறார். அதேபோல் ஜனநாயகன் படத்தின் பணிகளும் இருப்பதால், அதன் ரிலீஸ்க்கு பின் இந்த அறிவிப்பு வருவதே சரியாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications