தவெக VS ஆளுநர் மோதல்.. ராஜ்பவனுக்கு நேரில் சென்ற ஆதவ் அர்ஜூனா.. விஜய்க்காக வரிந்து கட்டிய ஜோதிமணி
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து விஜய் இன்று ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநர், விஜய்யை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க தயக்கம் காட்டுகிறார். இதனால் அதிகாரப்பூர்வமாக அவர் அழைக்கவில்லை. இந்நிலையில் தான் திடீரென்று தவெகவின் ஆதவ் அர்ஜூனா, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒருவர் முதல்வராக வேண்டும் என்றால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது.

இதில் விஜய் 2 தொகுதிகளில் வென்றுள்ளார். அவரால் 2 தொகுதிகளில் எம்எல்ஏவாக இருக்க முடியாது. இதனால் ஒரு தொகுதியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 233 ஆக சரியும். அதன்படி மெஜாரிட்டிக்கு 117 எம்எல்ஏக்கள் வேண்டும்.
மெஜாரிட்டி இல்லாத விஜய்
தற்போது தவெகவிடம் 107 எம்எல்ஏக்கள் (விஜய் 2 தொகுதியில் வென்றாலும் ஒரு எம்எல்ஏ)உள்ளனர். இன்னும் 10 எம்எல்ஏக்கள் தேவை. காங்கிரஸ் கட்சி தவெகவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை அமைத்துள்ளது. காங்கிரஸிடம் 5 எம்எல்ஏக்கள் உள்ளதால் தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. இன்னும் மெஜாரிட்டிக்கு 5 எம்எல்ஏக்கள் தேவை. இதனால் தலா 2 எம்எல்ஏக்கள் வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிகவிடம், விஜய் ஆதரவு கேட்டுள்ளார். இன்னும் அவர்கள் ஆதரவு கொடுக்கவில்லை.
ஆட்சி அமைக்க உரிமை கோரிய விஜய்
இதற்கிடையே தான் இன்று விஜய் சென்னை லோக்பவனில் (ராஜ்பவன்) விஜய் பொறப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். 112 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். முதலில் முதல்வராக பதவியேற்றுவிட்டு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் விரும்புகிறார்.
அழைக்காத ஆளுநர் - நேரில் போன ஆதவ்
ஆனால் ஆளுநரோ 117 எம்எல்ஏக்கள் கண்டிப்பாக வேண்டும் என்று கூறி விஜய்யை முதல்வராக பதவியேற்க அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்காமல் தாமதித்து வருகிறார். இந்நிலையில் தான் ஆதவ் அர்ஜூனா இன்று மீண்டும் 2வது முறையாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து விஜய்யை பதவியேற்க அழைப்பு விடும்படி கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் தற்போது வரை ஆளுநர் மாளிகை விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை.
வரிந்து கட்டிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி
இதனால் தவெக - ஆளுநர் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தவெக கூட்டணியில் இன்று இணைந்த காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி எம்பி ஆளுநரை தாக்கி பேச தொடங்கி உள்ளார். விஜய்யை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுக்காததற்கு ஜோதிமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், '' ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய்யை, மக்கள் முதலமைச்சர் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.
மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல. ஆளுநர் இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். ஆளுநர், தவெக தலைவர் விஜய்யை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இதனால் தற்போது தவெக - ஆளுநர் இடையே மோதல் தொடங்கி உள்ளது.














Click it and Unblock the Notifications