அடித்து ஆடும் விஜய்.. ஆடிப்போன எடப்பாடி.. கேப்பில் நிம்மதி பெருமூச்சுவிடும் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சட்டமன்றத்தில் தனது பலத்தை தவெக அதிகரித்துள்ளது. அதேநேரம் ஏற்கெனவே வெற்றி பெற்றிருந்த 2 தொகுதிகளையும் இழந்துள்ள அதிமுகவுக்கும், அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக எம்எல்ஏக்களாக இருந்த மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து காலியான தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இருவரும் அதே தொகுதியில் மீண்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தான் நேற்று வெளியானது.

Madurantakam and Dharapuram By-Elections AIADMK TVK

இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரத்தில் சத்தியபாமா 66,841 வாக்குகளை பெற்று திமுக வேட்பாளரை 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளர் பரந்தாமனை 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இரண்டு தொகுதிகளிலும் ஐந்து முனை போட்டி நிலவியது. விஜய் தீவிரமாகப் பிரசாரம் செய்ததுடன், முன்பு திமுகவுடன் இருந்த சில கட்சிகளின் ஆதரவும் தவெக அரசுக்கு இருந்ததால் வென்றது. இருப்பினும், தாராபுரத்தில் வெற்றி வித்தியாசம் மிக அதிகமாக இல்லை.

தவெக

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 107ல் இருந்து 109 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 உறுப்பினர்கள் தேவை. எனவே, இன்னும் 9 உறுப்பினர்களின் ஆதரவு தவெகவுக்குத் தேவைப்படுகிறது. மேலும் 5 தொகுதிகள் காலியாக உள்ளன. அவற்றில் திருச்சி கிழக்கு தொகுதியும் அடங்கும். முதல்வர் விஜய் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்து கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

அடுத்து என்ன

இந்த 5 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்றால், அதன் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 114 ஆக உயரும். அப்போதும் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையைவிட 4 உறுப்பினர்கள் குறைவாகவே இருக்கும். இதனால், தவெக அரசு தொடர்ந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். காங்கிரசுக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளனர். இடதுசாரிக் கட்சிகளின் 4 எம்எல்ஏக்களும் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சுகள் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவெக - காங்கிரஸ் உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் பெரும்பான்மையை நெருங்குவது தவெகவுக்கு மகிழ்ச்சி தான்!

அதிமுகவுக்கு அடுத்தடுத்து நெருக்கடி

சில மாதங்களுக்கு முன்பு இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த அதிமுக, தற்போது இரண்டையும் இழந்துள்ளது. குறிப்பாக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனங்கள் மேலும் அதிகரிக்கும். ஏற்கெனவே அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். தற்போது இரண்டு தொகுதிகளிலும் தோல்வி ஏற்பட்டுள்ளதால், மேலும் சிலர் தவெகவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொடர்ந்து தேர்தல் சவால்களைச் சந்தித்து வருகிறது. 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 லோக்சபா தேர்தல், 2026 சட்டசபை தேர்தல் என அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இந்த இடைத்தேர்தல் முடிவுகளும் கட்சிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளன.

கூட்டணி கணக்கு

அதிமுகவின் இடத்தையே தவெக நிரப்பும் நிலையில், தொடர் தோல்விகள் அதிமுகவுக்கு பயங்கர அழுத்தத்தை ஏற்படுத்தும் இதற்கிடையே அதிமுகவை அழிக்கும் நோக்கில் தவெக செயல்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளாலேயே அதிமுக இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமகவுக்கு தற்போது 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாமக எதிர்காலத்தில் தவெகவுக்கு ஆதரவளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், பாமக தவெகவுடன் இணைந்தால்.. விசிக அந்த கூட்டணியில் நீடிக்காது. விசிகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஏனென்றால் கடந்த 15 ஆண்டுகளாக பாமக- விசிக ஒரே கூட்டணியில் இடம்பெறவில்லை.

திமுக

இந்த இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகளின் துணையின்றி போட்டியிட்ட திமுக, இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துள்ளது. தனது அடிப்படை வாக்கு வங்கியை திமுக இழக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. அதாவது அதிமுகவின் வாக்குகளே தவெகவுக்கு அதிகம் சென்றுள்ளது. திமுகவின் வாக்குகள் இல்லை. எனவே, அடுத்து வரவிருக்கும் இடைத்தேர்தல்களிலும் 2029 லோக்சபா தேர்தலிலும் வலுவான போட்டியை அளிக்கும் வகையில் கட்சியை மீண்டும் ஒருங்கிணைப்பது திமுகவுக்கு முக்கிய சவாலாக இருக்கும்.

மொத்தத்தில் மதுராந்தகம், தாராபுரம் வெற்றிகள் தவெகவின் சட்டமன்ற பலத்தை அதிகரித்துள்ளதுடன், அதிமுக தலைமையின் மீதான அழுத்தத்தையும் அதிகரித்துள்ளன. காலியாக உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்கு நெருங்குவது, கூட்டணி கட்சிகளை சார்ந்திருப்பதைக் குறைப்பது ஆகியவையே விஜய் தலைமையிலான தவெக அரசின் அடுத்தகட்ட சவால்களாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+