சிபிஐ விசாரணைக்காக.. உயிர் பலியை இப்படியா பயன்படுத்தணும்? தவெக விஜய்க்கு கிளம்பும் எதிர்ப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அமைந்திருந்த புலன் விசாரணை குழு வேண்டாம், சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரி தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தை அணுகியிருக்கிறது. ஆனால், இதற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தவறான வழியில் பயன்படுத்தியிருக்கிறது என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
"இதெல்லாம் ஒரு கட்சியா? என்ன மாதிரியான கட்சி இது? தலைவர்களுக்கு தலைமைப்பண்பே இல்லை" என்று கரூர் நெரிசல் பலி சம்பவ வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தை சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்தது. மட்டுமல்லாது வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையத்தையும் அமைக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. இதனையடுத்து புலன் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டிருந்தது.

ஆய்வில் வெளியான உண்மை
ஆனால் எங்களுக்கு இந்த விசாரணை குழு மீது நம்பிக்கையில்லை, எனவே சிபிஐ விசாரணை வேண்டும் என்று கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தை நாட பட்டிருக்கிறது. உயிரிழந்த குடும்பத்தினரை வைத்துதான் கட்சி இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறது என்றும், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், உயிரிழந்த குடும்பத்தினருக்கே இப்படி ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது தெரியாது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. டிரைப்ஸ் தமிழ் எனும் யூடியூப் சேனல் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
கைவிட்ட கணவர்
உயிரிழந்த 41 பேரில் ரித்விக் எனும் 9 வயது சிறுவனும் ஒருவர். இச்சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. பன்னீர்செல்வம் என்பவர் குழந்தையின் தந்தைதான். ஆனால் குழந்தை ரித்விக் 6 மாதங்களாக இருக்கும்போதே, பன்னீர்செல்வம் தனது குழந்தையையும், மனைவியையும் கை விட்டு விட்டு போய்விட்டார். கவணின் துணை இல்லாமல், தனி ஆளாக தனது தாய்(குழந்தையின் பாட்டி) மற்றும் சகோதரரின்(குழந்தையின் தாய் மாமா) உதவியுடன் குழந்தையை வளர்த்ததாக தாய் சர்மிளா கூறியிருக்கிறார்.
நிவாரண தொகையில் பங்கு?
மட்டுமல்லாது சிபிஐ விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்தது தொடர்பாக எந்த விவரமும் எங்களுக்கு தெரியாது என்றும், அப்படியான வழக்கை நாங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை என்றும் தாய் கூறியிருக்கிறார். அப்படியெனில் இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் திடீரென தந்தை பன்னீர்செல்வம் உள்ளே வந்தது ஏன்? குழந்தை ரித்விக்கின் மரணத்திற்காக வழங்கப்பட்ட தமிழக அரசின் நிவாரண தொகையில் பங்கு பெறவும், தவெக வழங்க உள்ள நிவாரணத்தை முழுமையாக பெறவுமே இப்படியான வழக்கு தொடுக்க பன்னீர்செல்வம் சம்மதித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் யூடியூப் சேனல் விசாரணையில் வெளியாகியிருக்கிறது.
விஜய் செய்த மோசமான அரசியல்
உண்மையில் தமிழக அரசின் விசாரணையில் நம்பிக்கை இல்லை எனில், விஜய் தனது கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும். தவிர்த்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் இழுத்துவிடுவது என்பது என்ன மாதிரியான அரசியல்? என்றும் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். குழந்தையின் குடும்பத்திற்கும், தந்தை பன்னீர்செல்வத்திற்கும் எந்த தொடர்புமே கிடையாது என்பதற்கு போதுமான சான்றுகளை குடும்பத்தினர் வைத்திருக்கின்றனர். அதேபோல, உள்ளூர் மக்களும் இதை உறுதி செய்கின்றனர்.
இப்படி இருக்கையில் சம்பந்தமே இல்லாத ஒருவரை வைத்து ஏன், உச்சநீதிமன்றத்தை கட்சி அணுக வேண்டும் எனவும் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.












Click it and Unblock the Notifications