சைவ ஓட்டலுக்கு வந்து.. சிக்கன் ரைஸ் கேட்டு தகராறு.. ஆயுதப்படை போலீஸாருக்கு அடி உதை.. பரபரத்த சென்னை
ஓட்டல் ஊழியர்களும் பொதுமக்களும் சேர்ந்து கொண்டதை அடுத்து, காவலர்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர்.
சென்னை: சென்னையில் சைவ ஓட்டலுக்கு வந்து சிக்கன் ரைஸ் கேட்டு தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை போலீஸாரை ஓட்டல் ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடிகளை போல மதுபோதையில் வந்து தகராறில் ஈடுபட்ட காவலர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதுபோன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வலயுறுத்தி வருகின்றனர்.

காவல்துறைக்கு இழுக்கு
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அல்லும் பகலும் தனது குடும்பத்தை மறந்து உழைக்கும் அசாத்தியமான போலீஸார் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதே சமயத்தில், காவல்துறைக்கே இழுக்கை தேடி தரும் செயல்களில் ஈடுபடும் போலீஸாரும் இருக்கவே செய்கிறார்கள். கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இந்த சப் இன்ஸ்பெக்டர் கைது; விபச்சாரத்தில் ஈடுபட்ட காவலர் கைது என்பன போன்ற செய்திகளை பார்க்கும் போது காவல்துறை மீதான நம்பிக்கையை சிதறடிப்பதாக உள்ளது.

சைவ ஓட்டல்
சில தினங்களுக்கு முன்பு கூட சேப்பாக்கத்தில் உள்ள ஒரு கடையில் தங்களுக்கு தேவையான பொருட்களை போலீஸார் அடாவடியாக பறித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தாம்பரத்தில் தற்போது நடந்திருக்கிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த பதுவஞ்சேரியில் சைவ ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலுக்கு ஆயுதப்படை காவலர்கள் இருவர் கடந்த 15-ம் தேதி சென்றுள்ளனர்.

சிக்கன் ரைஸ் கேட்டு தகராறு
அப்போது அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஓட்டலுக்குள் சென்ற அவர்கள் சிக்கன் ரைஸ் கொண்டு வருமாறு கூறியுள்ளனர். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள், சைவ ஓட்டலுக்கு வந்து சிக்கன் ரைஸ் கேட்கிறீர்களே எனக் கூறியிருக்கின்றனர். இதனை கேட்ட ஆயுதப்படை காவலர்கள், ஓட்டல் ஊழியர்களை திட்டியதாக தெரிகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கைகலப்பு
ஒருகட்டத்தில், வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஓட்டல் ஊழியர்களும், காவலர்கள் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். பின்னர் ஓட்டல் ஊழியர்களும் பொதுமக்களும் சேர்ந்து கொண்டதை அடுத்து, காவலர்கள் இருவரும் அங்கிருந்து சென்றனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்களிடம் துறை ரதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஆயுதப்படை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications