வெளியே வந்ததும் சீண்ட முயன்றனர்.. சென்னை பப் வெளியே கும்பல் செய்த அட்டூழியம்.. போலீசில் பெண் புகார்
சென்னை: சென்னையில் உள்ள பிரபல பப்பிற்கு வெளியே ஊடகவியலாளர்கள் தங்களை துன்புறுத்தியதாக காவல்துறையில் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள பிரபல பப்- பார் ஒன்றிலிருந்து சமீபத்தில் பெண்கள் வெளியேறியதை ஊடகங்கள் பல மோசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு இருந்தன. அங்கே பப் இரவு நேரம் தாண்டியும் இயங்கியதாகவும், இந்த பப்பில் தவறான விஷயங்கள் நடந்ததாகவும் செய்திகள் வந்தன.

இந்த செய்திகள் ஊடகங்கள் வெளியிட்ட விதம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. முக்கியமாக சில காட்சி ஊடகங்கள் இதை செய்தியாக்கிய விதம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. மிக மிக தவறான கண்ணோட்டத்தில் இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டு செய்திகளாக வெளியிடப்பட்டன. முக்கியமாக குறிப்பிட்ட சில ஊடகங்கள் பெண்களின் அங்கங்களை குறி வைத்து மீண்டும் மீண்டும் காட்சிகளை வெளியிட்டன. இரவு நேரம் கடந்து இயங்கிய பப்.. பெண்கள் ஆட்டம் என்றெல்லாம் தவறான தலைப்புகள் போட்டு செய்திகள் வெளியிட்டன.
போலீஸ் புகார்: இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். சென்னையில் உள்ள பிரபல பப்பிற்கு வெளியே ஊடகவியலாளர்கள் தங்களை துன்புறுத்தியதாக காவல்துறையில் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண், சென்னையில் உள்ள ஊடகவியலாளர்களால் துரத்தப்பட்டு, மோசமான வார்த்தைகளால் திட்டப்பட்டதாக புகார் செய்துள்ளார். தான் அனுமதியின்றி ரெஸ்டோபார்க்கு வெளியே படம்பிடிக்கப்பட்டாதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனில் அவர் அளித்த புகாரில், "நாங்கள் வெளியே வந்தபோது, எங்கள் மீது பிளாஷ் அடித்து வீடியோ எடுக்க ரெடியாகி பல டிவி கேமராக்கள் இருந்தன. நாங்கள் எங்கள் முகத்தை மறைக்க முயன்றபோது, கேமராமேன்கள் எங்களை அசிங்கமான மொழியில் திட்டினர். நாங்கள் எங்கள் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் பயந்து தலைமறைவாக ஓடினோம். அப்போதும் கேமராமேன்கள் எங்களைத் துரத்திக் கொண்டிருந்தனர்.
எங்களை துரத்தி வந்து அவர்கள் படம் பிடித்த விதம் கடுமையான அழுத்தத்தை கொடுத்தது. நாங்கள் மற்ற பெண்களுடன் வெளியே வந்தபோது, அதிக குடிபோதையில் ஐந்து இளைஞர்கள் எங்களைத் சீண்ட, தடவ முயன்றனர். அவர்கள் ஐந்து பேரும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை இழுக்க முயன்றனர். நுழைவாயிலுக்கு வெளியே இருந்த பவுன்சர்கள் மற்றும் போலீசார்தான் எங்களை காப்பாற்றினர். மீடியா என்ற பெயரில் அவர்கள் எங்களிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றனர்.
இன்னொரு ஆண் அளித்த புகாரில், குடிபோதையில் இருந்த 5 பேர், நாங்கள் வெளியேறும் எனது மனைவியை தடவ முயன்றனர். பாரில் நங்கள் மேட்ச் பார்க்க சென்றோம். சாப்பிட்டுவிட்டு வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் கீழே காத்திருப்பதை எங்களிடம் நிர்வாகிகள் தெரிவித்தனர். அங்கே இருந்த கேமராமேன்கள் என் மனைவி உட்பட பெண்களின் முகத்தில் கேமராவைத் திணித்து புகைப்படம் எடுக்க முயன்றனர். பின்னர், நாங்கள் எங்கள் வாகனத்தை வேக வேகமாக எடுத்து.. அந்த இடத்தை விட்டு வெளியேறினோம், என்று அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
உண்மை என்ன?: இந்த விவகாரத்தில் உண்மையில் நடந்தது இது இல்லை என்று தி நியூஸ் மினிட் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. https://www.thenewsminute.com/ ஊடகம் வெளியிட்ட செய்தியில்.. அங்கே 11 மணி நெருங்கும் நேரத்தில் 5 -6 ஆண்கள் உள்ளே நுழைய முயன்று உள்ளனர். ஆனால் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட வில்லை.
பப் மூடப்போகிறது என்பதாலும் , பப் உள்ளே செல்ல ஷூ அணிய வேண்டும் என்பதாலும் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர்களை பவுன்சர்கள் தடுத்துள்ளனர். இந்த நிலையில் வெளியேவே அமர்ந்த அந்த ஆண்கள் குழு.. பப் உள்ளே இருந்து யார் வெளியே வந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று வம்பு செய்துள்ளனர் . அதோடு அங்கேயே அமர்ந்து பப் நிர்வாகிகளை பார்த்து உள்ளனர்.
இந்த நிலையில் அங்கே பிரபல தனியார் ஊடக செய்தியாளர் ஒருவர் வந்துள்ளார். அவரும் உள்ளே நுழைய முயன்றுள்ளார். அவரை தடுக்க முயன்ற போது மற்ற ஆண்களும் இந்த செய்தியாளருடன் சேர்ந்து கொண்டு உள்ளே நுழைய முயன்று மோதலில் ஈடுபட்டு உள்ளனர். கிட்டத்தட்ட அங்கே கைகலப்பு ஏற்படுவது போல மோதல் ஏற்பட்டு உள்ளது.
இது பெரிய மோதலாக வெடிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் சரியாக சொல்லி வைத்தது போல.. யாரோ சொல்லி அழைத்தது போல மற்ற மீடியாக்கள் சில வந்துள்ளன. இது எல்லாம் அந்த ஆண்கள் செய்த பழிவாங்கும் நடவடிக்கை போல இருந்ததாக கூறப்பட்டு உள்ளது. அதோடு இல்லாமல் அந்த தனியார் ஊடக செய்தியாளர்.. தான் கிரைம் செய்தி பார்க்க சென்றதாகவும்.. ஒரு டிப் கிடைத்து அங்கே வந்ததாகவும் கூறியுள்ளார், என்று அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மொத்தத்தில் அந்த ஆண்கள் குழு தாங்கள் உள்ளே அனுமதிக்கப்படாத காரணத்தால் உள்ளே இருக்கும் பெண்களை எல்லாம் சேர்த்து அசிங்கப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இப்படி செய்து இருக்கலாம்.. உள்ளே தவறு நடப்பதாக பொய்யான தகவல் பரப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications