வாவ்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா இடையே ரயில் போக்குவரத்து.. கடலுக்கடியில் ரூட்.. செம பிளான் ரெடி
சென்னை: ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து மும்பைக்கு அரபிக்கடல் வழியாக 2000 கிலோமீட்டர் தொலைவுக்கு பல பில்லியன் டாலர் செலவில் புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தண்ணீருக்கு அடியில் மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் புல்லட் ரயில் சேவையை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்க உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்... என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது வானளாவிய உயர்ந்த கட்டங்களும், பாம் தீவுகளும் தான். பொதுவாக தீவுகள் இயற்கையாக அமையும் நிலையில் துபாயில் பாம் தீவுகள் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல் உரிய பாதுகாப்புடன் உயரமான கட்டடங்களை கட்டுவதற்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெயர் பெற்றுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற புதிய கட்டடங்களை உருவாக்குவதையும் சாத்தியமில்லை என கூறப்படும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வெற்றி பெறுவதையும் அந்த நாடு லட்சியமாக கொண்டுள்ளது.
தற்போது இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே நல்ல உறவு உள்ளது. இருநாடுகளும் பல விஷயங்களில் இணைந்து செயல்பட தொடங்கி உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் பணி செய்து வருகின்றனர். அதோடு தினமும் பல விமானங்கள் இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விமான போக்குவரத்துக்கு பதில் புல்லட் ரயில் போக்குவரத்தை தொடங்கினால் என்ன? என்ற யோசனை உதித்துள்ளது. இந்த யோசனையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கடற்கரை நகரமான புஜைராவில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு நீருக்கடியில் புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய ஆலோசகர் ப்யூரோ லிமிடெட் (UAE's National Advisor Bureau Limited) பரிசீலனை செய்ய தொடங்கி உள்ளதோடு, விரைவில் வழித்தடங்கள் குறித்த ஆய்வை தொடங்கி சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க உள்ளதாக UNILAD செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புஜைரா-மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டம் என்பது பல மில்லியன் டாலர் மதிப்பீட்டில் அரபிக்கடல் வழியாக செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது அரபிக்கடலுக்கு அடியில் புல்லட் ரயிலுக்கான பாதை அமைத்து இந்த திட்டத்தை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடலில் நீருக்கடியில் ரயில் செல்லும்போது ஜன்னல் வழியாக கடலின் அழகை பயணிகள் ரசித்து செல்லும் வகையில் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் புஜைரா மற்றும் மும்பை இடையே 1,240 மைல் தூரம் உள்ளது. அதாவது 2,000 கிலோமீட்டர் தொலைவாகும்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கும் வரும்போது மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும். இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் பெரும் சவால்கள் உள்ளன. குறிப்பாக நீருக்கடியில் புல்லட் ரயில்பாதை அமைத்து, ரயிலை இயக்குவது என்பது பெரும் சவாலான காரியமாக உள்ளது.
இந்த சவால்களுக்கு நடுவே தான் இந்த திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிசீலனை செய்து வருகிறது. அதோடு இந்த திட்டம் செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த சாத்தியக்கூறு அறிக்கையை பொறுத்து இந்த திட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு என்பது இருக்கும்.
மேலும் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் இருநாடுகள் இடையேயான பயண நேரம் குறையும். அதாவது இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விமான பயண நேரம் என்பது 3 மணிநேரமாக உள்ளது. அதோடு விமானத்தை பிடிப்பதற்காக முன்கூட்டியே நாம் விமான நிலையங்களுக்கு சென்று காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் குறைந்தது 5 முதல் 6 மணிநேரம் நாம் செலவிட வேண்டி உள்ளது. ஆனால் புல்லட் ரயில் திட்டம் நடைமுறைக்கு வந்தால் விமான பயண நேரத்தை ஒப்பிடும்போது மும்பை-புஜைரா புல்லட் ரயில் சேவை செயல்பாட்டுக்கு வந்தால் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் மிச்சமாகும்.
அதோடு இருநாடுகள் இடையேயான வர்த்தகம் மேம்படும். இருநாடுகள் இடையேயான சரக்கு பரிமாற்றத்தை புல்லட் ரயில் மூலம் வேகமாக செய்து கொள்ள முடியும். அதோடு புஜைராவுக்கு நர்மதா நதியிலிருந்து தண்ணீர் எடுத்து செல்ல முடியும். அதேபோல் இந்தியாவுக்கு அங்கிருந்து எண்ணெய் இறக்குமதியும் எளிமையாக நடக்கும்.
இதற்கு முன்பு இங்கிலாந்து-பிரான்ஸ் இடையே Channel Tunnel என்ற பெயரில் கடலுக்கடியில் அடியில் 56 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைத்து ரயில் இயக்க திட்டமிடப்பட்டது. இந்த ரயில் பாதை திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த பாதையில் ரயில் 112 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை ஒப்பிடும்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவின் மும்பை இடையே கடலில் நீருக்கடியில் புல்லட் ரயில் திட்டம் 50 மடங்கு பெரியதாகும். அதோடு பத்து மடங்கு வேகமாக ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தில் பல சவால்கள் ஏற்படலாம்.
இருப்பினும் சவால்களை சமாளித்து புஜைரா-மும்பை நீருக்கடியில் இயங்கும் புல்லட் ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் நிலையில் இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே விமானங்களுக்கு பதில் ரயிலிலேயே நம்மால் பயணிக்க முடியும். இதனால் இந்த திட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு என்பது தற்போது அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications