கையில் கேஷ் இருந்தாதான் இனிமேல் ஊபர் ஆட்டோ, டாக்சி புக் பண்ண முடியுமா?
சென்னை: ஊபர் ஆட்டோ புக் செய்யும்போது, "கேஷ் ஒன்லி" என்ற பாப்-அப் தோன்றினால் பயப்பட வேண்டாம். உங்களிடம் ரொக்கப் பணம் கையில் இல்லை என்றாலும், நீங்கள் ஆட்டோ டிரைவருக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியும்.
நீங்கள் ஊபர் ஆட்டோவில் பயணிக்க முன்பதிவு செய்து, உங்கள் முன்பதிவு உறுதி செய்யப்படுவதற்கு முன்பு "Auto Is Now Cash-Only" எனக் குறிப்பிட்டு பாப்-அப் ஒன்று உங்கள் ஸ்கிரீனில் தோன்றும். ஆஹா, நம்மிடம் கேஷ் இல்லையே என பயப்பட வேண்டாம். உங்கள் ஆட்டோ ஓட்டுநர் தனது தனிப்பட்ட கணக்கில் நேரடியாக UPI வழியாக பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்வார்.

பெரும்பாலானோர், அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல ஆன்லைன் டாக்சி புக்கிங் ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னணி ஆட்டோ புக்கிங் தளமான ஊபர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, ஆட்டோ பயணங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அறிமுகப்படுத்தியது. அது உடனே பிப்ரவரி 18 முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஊபர் ஸ்கிரீனில் பாப்-அப் செய்தி வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில், ஊபர், ஓலா மற்றும் ராபிடோ போன்ற முன்னணி டாக்சி புக்கிங் ஆப்கள் ஆட்டோ ரிக்ஷா புக்கிங்கிற்கான செயலியில் பணம் செலுத்துவதை நிறுத்துவதாக அறிவித்தன. இந்நிலையில் தற்போது ஊபர் பாப்-அப் மூலம் பயனர்களுக்கான அறிவிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது.
2024 ஆம் ஆண்டில், ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ ஆகியவை ஆட்டோ ரிக்ஷா பயணங்களுக்கான ஆப்பில் வாலட் கட்டண விருப்பத்தை நீக்கின. இதனால் பயணிகள் நேரடியாக ஓட்டுநர்களுக்கு பணத்தை ரொக்கமாகவோ அல்லது UPI மூலம் பணம் செலுத்த வேண்டி உள்ளது. நம்ம யாத்ரி போன்ற வளர்ந்து வரும் தளங்களிலிருந்து அதிகரித்து வரும் போட்டியை கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி வரியைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முன்னதாக, ஓலா மணி, ஊபர் கேஷ் அல்லது ராபிடோ வாலட் போன்ற டிஜிட்டல் வாலட்களைப் பயன்படுத்தி ஆட்டோ ரிக்ஷா பயணங்களுக்கு பயணிகள் பணம் செலுத்த முடியும். இருப்பினும், புக்கிங் நிறுவனங்கள் இப்போது பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையிலான நேரடி பரிவர்த்தனைகளை மட்டுமே அனுமதிக்கின்றன.
இந்த முடிவுக்கு 2 காரணங்கள் முக்கியமாகச் சொல்லப்படுகின்றன. ஒன்று, ஜிஎஸ்டி தொடர்பான செலவுகளைக் குறைப்பது. மற்றொன்று, கமிஷன் இல்லாத தளங்களுக்கு அதிகளவில் இடம்பெயரும் ஓட்டுநர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக.
மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், ரைட்-ஹெய்லிங் நிறுவனங்கள் பரிவர்த்தனைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். ஓலா, ஊபர் மற்றும் ராபிடோ ஆகிய செயலிகள் ஓட்டுநர்களை பயணிகளுடன் இணைக்கும் இடைத்தரகர்களாகச் செயல்படுவதால், இந்த வரியைச் சேகரித்து அனுப்புவதற்கு அவையே பொறுப்பு. இப்போது டிஜிட்டல் வாலட் கட்டண முறையை நீக்கி உள்ளதன் மூலம், இந்த வரிச் சுமை கிடையாது.












Click it and Unblock the Notifications