தமிழர்கள் குண்டு வைத்தார்களா? “புது உச்சத்தில் பிரிவினை அரசியல்..” பாஜக அமைச்சருக்கு உதயநிதி கண்டனம்
சென்னை: பெங்களூரின் பிரபல ஓட்டலில் சில நாட்களுக்கு முன்னர் குண்டு ஒன்று வெடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இதற்கு தமிழர்கள்தான் காரணம் என்று மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியிருப்பது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு ஒயிட்ஃபீல்டு அருகே உள்ள புரூக்ஃபீல்டில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி பட்டப்பகலில் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 10 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதற்காக குண்டு வெடிக்கவைக்கப்பட்டது? தீவிரவாதிகளின் செயலா? வெளிநாட்டு சதியா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

முதலில் பெங்களூர் போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தொடங்கியது. ஆனால், பின்னர் என்ஐஏ வசம் விசாரணை சென்றது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சந்தேக நபர் தற்போது பிடிபட்டிருக்கிறார். இந்நிலையில், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஒன்றிய இணையமைச்சர் ஷோபா கரந்தலாஜே பேசிய விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரின் சித்தன்னகல்லியில் இந்து மதத்தை சேர்ந்தவர் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் 17ம் தேதி மாலையில் இவரது கடையில் அனுமான் பாடல்கள் ஒலிக்கப்பட்டதாகவும், அப்போது கடை பக்கமாக நடந்து வந்துக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் இந்த பாடல்கள் குறித்து கேள்வி எழுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு கட்டத்தில் கை கலப்பாக மாறி, இளைஞர்கள் கடைக்காரரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த விவகாரத்தை மையப்படுத்தி, இந்துக்களை இஸ்லாமியர்கள் தாக்கிவிட்டனர் என்று பாஜக இன்று போராட்டம் நடத்தியது. இதில், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்எல்ஏ எஸ் சுரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இவர்கள் போராட்டத்தின்போது திடீரென பேரணி நடத்த முயன்றனர். ஆனால், போலீசார் இதற்கு அனுமதி மறுத்து அனைவரையும் கைது செய்துள்ளனர்.
முன்னதாக போராட்டத்தின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஷோபா கரந்த்லாஜே, "பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் தமிழர்களுக்கு தொடர்பு இருக்கிறது" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இத்துடன் நின்றுவிடாமல் டெல்லியிலிருந்து வருபவர்கள், 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' எனவும் கேரளாவிலிருந்து வருபவர்கள் இங்குள்ள மக்கள் மீது ஆசிட் வீசுகின்றனர் என்று கூறியுள்ளார்.
இந்த கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "மத்திய அமைச்சர் ஷோபாவின் விஷமத்தனமான அறிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், பாஜக அமைச்சர் எப்படி இவ்வளவு அபத்தமான கருத்தை தெரிவித்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பா.ஜ.க.வின் இழிவான பிரித்தாளும் அரசியல் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பாஜகவின் கேவலமான கூற்றுகளை தமிழர்களும், கன்னட சகோதர சகோதரிகளும் நிராகரிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். என்ஐஏ இவரையும் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நமது மகத்தான தேசத்தின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வெறுப்புப் பேச்சுக்காக அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications