திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் பெரிய போட்டியே.. எங்களுக்கு ரெண்டுமே ஒன்றுதான்.. உதயநிதி பளிச்
சென்னை: திமுகவிற்கு யார் போட்டி என்பதில் தான் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நடக்கிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டுள்ள நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோல, பாஜகவும் அடுத்தகட்ட ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி எங்கள் இருவருக்கும்தான் எனத் தெரிவித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திமுக - பாஜக இடையேதான் போட்டி என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த உதயநிதி, "இதுகுறித்து அதிமுக தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, அதிமுகவோ, பாஜகவோ யாராக இருந்தாலும் ஒன்றுதான். எங்கள் தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலை எதிர்கொள்வோம். மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் இப்போது தமிழ்நாட்டில் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் தலைவரின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் வெற்றி பெறுவோம்" எனத் தெரிவித்தார்.
மேலும், ஆளுநர் ரவி, தமிழ்நாட்டில்தான் சாதிய வன்கொடுமைகள் அதிகமாக இருக்கிறது எனப் பேசியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, "தமிழக ஆளுநர் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் சென்று பார்க்கிறாரா, இல்லையா என்று தெரியவில்லை. தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் இல்லை என்று சொல்லமாட்டேன். இருந்தாலும், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் குறைவுதான். ஆளுநர் அவருக்கான பணிகளைச் செய்யாமல், தேவையில்லாத அரசியல் எல்லாம் இங்கு பேசிக்கொண்டிருக்கிறார். தமிழக மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆசிரியர்களின் போராட்டம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி, "ஆசிரியர்கள் போராட்டம் முடிவடைந்துவிட்டது. தயவுசெய்து மறுபடியும் ஆரம்பித்து விட்டுவிடாதீர்கள். அவர்கள் தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். நாங்களும் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறோம். நிதிநிலைமைக்கு ஏற்ப, தமிழக முதல்வர் ஒவ்வொன்றாக சரிசெய்து வருகிறார்.
சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். போராட்டத்தை வாபஸ் வாங்கிவிட்டனர். ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் நானும் கேட்டுக்கொள்கிறேன். பள்ளிக்கூடங்கள் எல்லாம் திறந்துவிட்டன. தயவுகூர்ந்து உங்களுடைய பணிகளைத் தொடருங்கள். நிச்சயமாக முதல்வர் உரிய நேரத்தில் தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications