சனாதனம் என்றால் என்ன என்பதை எடப்பாடி தேடிக்கொண்டிருக்கிறார்! ஆடு ஒரு நாள் காணாமல் போகும்! -உதயநிதி
சென்னை: 'சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து எடப்பாடி பழனிசாமி தேடிக் கொண்டிருக்கிறார் போல் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலாய்த்துள்ளார்.
மேலும், ஆடு ஒருநாள் காணாமல் போகும் போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''சனாதனம் என்றால் என்ன என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது.
ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொரோனா காலத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்க வீடு வீடாக ஏறிக்கொண்டிருந்தோமே, அப்போது அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் என்ன செய்தன? மணி அடித்தபடியும், விளக்கு பிடித்தபடியும் கொரோனா கிருமியை ஒழிக்கப் போராடிக் கொண்டு இருந்தன.
இன்று நாம் ஆளுங்கட்சி. இன்றும் நாம் கலைஞரின் நூற்றாண்டை மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாட, நலத்திட்ட உதவிகளை வழங்க வீடு வீடாக ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறோம். அ.தி.மு.க.வோ ஆடலும் பாடலும் பின்னணியில், புளி சாத மாநாடுகளை நடத்திக்கொண்டு, விழுவதற்குக் கால்கள் கிடைக்காதா, ஊர்ந்து போக ஏதாவது ஃபர்னிச்சர் கிடைக்காதா எனத் தேடிக் கொண்டிருக்கிறது.
மணிப்பூர் கலவரத்தைத் தூண்டிவிட்டு 250-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்படக் காரணமாக இருந்தது, 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல்... போன்றவற்றைத் திசை திருப்பத்தான் மோடி அண்ட் கோ இப்படி சனாதன கம்பை சுற்றிக்கொண்டு இருக்கிறது.
இவர்களின் கைகளில் தான் மொத்தமாக சிக்கியுள்ளதால், 'ஒரே நாடு ஒரே தேர்தலா... நடத்திடுவோம் எஜமான்', 'பாரதம்னு மாத்துறீங்களா... மாத்திடுங்க ஓனர்' என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.''












Click it and Unblock the Notifications