அமித்ஷாவை எதிர்த்து அரசியல்! தேசிய அரசியலில் கவனம் ஈர்க்கும் உதயநிதி! கருணாநிதி பாணி பாலிடிக்ஸ்!
சென்னை: அமித்ஷாவை எதிர்த்து அரசியல் செய்யவும் தயங்கமாட்டேன் என்பதை தனது சமூகவலைதளப் பதிவு மூலம் உணர்த்தியுள்ளார் அமைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்.
சனாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்ததுடன் பொதுக்கூட்டம் ஒன்றில் பதிலடி கூட கொடுத்தார். இந்நிலையில் இந்தி மொழியை மையமாக வைத்து அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்து மீண்டும் தேசியளவில் கவனம் ஈர்த்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அமித்ஷாவை எச்சரிக்கும் தொணியில் உதயநிதி விடுத்துள்ள பதிவு வருமாறு; '' இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து.''
''தமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது? நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் அமித்ஷாவுடன் எந்தச் சூழலிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உதயநிதி உணர்த்தியுள்ளார். அதேபோல் எத்தகைய சோதனைகளுக்கும் தாம் தயாராக இருப்பதையும் அவர் சூசகமாக இந்தப் பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். சனாதனம் எதிர்ப்பு, இந்தி மொழி எதிர்ப்பு என பல்வேறு விவகாரங்களில் கருணாநிதி பாணி அரசியலை கையில் எடுத்து தேசிய அரசியலிலும் கவனம் ஈர்த்து வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications