"ஸ்டாலின் தாத்தாவுக்கு நன்றி" ஒரு வீடியோவுடன் உதயநிதி ஸ்டாலின் ட்வீட்! ஏன் என்னாச்சு?
சென்னை: ஸ்டாலின் தாத்தாவுக்கு நன்றி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.
இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சகோதரர் ராஜீவ். அவருடைய மகள் ஹர்சினிக்கு ஹீமோபிலியா எனும் நோய் பாதிப்பு இருந்த நிலையில், அவருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்களின் ஏற்பாட்டில், சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது நம்முடைய கவனத்திற்கு வந்தபோது, சிறுமி ஹர்சினியை சமீபத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தோம். அப்போது, ஹர்சினியின் குடும்பத்தினர், வீடற்ற நிலையில் சாலையோரம் வசிப்பதாகவும், சுகாதாரமான வாழ்வுக்கு அரசு தரப்பில் ஒரு வீடு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறைக்கு நாம் அனுப்பி வைத்த நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சத்தியமூர்த்தி நகர் திட்டப் பகுதியில் ஹர்சினிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை ஹர்சினியின் குடும்பத்தாரிடம் வழங்கி வாழ்த்தினோம். புதிய இல்லத்தில் தங்கை ஹர்சினியின் கனவுகள் மெய்ப்படட்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அது போல் மற்றொரு பதிவில் ஸ்டாலின் தாத்தாவுக்கு நன்றி என கூறி ஹர்சினியின் வீடியோவையும் உதயநிதி வெளியிட்டிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி சென்னை திநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள முதல்வர் சென்ற போது அங்கே ஹர்சினி எனும் 3 ஆம் வகுப்பு மாணவி தாத்தா பாய் என கூறினார்.
அந்த சிறுமியின் குரலை கேட்டதும் காரில் உட்கார்ந்த முதல்வர் மீண்டும் வெளியே வந்து அந்த சிறுமிக்கு கை அசைத்தார். இந்த நிலையில் சிறுமி எதற்காக வந்திருக்கிறார் என்ற விவரங்களை முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்திருக்கிறார். அவருக்கு சிகிச்சைகாகவும் சாலையோரத்தில் வசிக்கும் தங்களுக்கு வீடு கேட்டும் மனு கொடுக்க வந்திருக்கிறார் என்பதை அறிந்த நிலையில் முதல்வர் அந்த சிறுமியையும் பெற்றோரையும் அழைத்தார்.
தேனாம்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் அழைத்து சிறுமியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து ஹர்சினியின் தந்தை கூறுகையில் முதலில் எங்களை மா.சுப்பிரமணியன் சார் வர சொன்னார், அவரை பார்த்தோம், அப்போதுதான் குழந்தைக்கு அடிப்பட்டால் ரத்தம் நிற்காமல் வந்துக் கொண்டே இருக்கும் என்பதை சொன்னோம். அவர் எந்த மருத்துவமனையில் பார்க்கிறீர்கள் என கேட்டு அந்த ஹாஸ்பிட்டலின் பெரிய டாக்டருக்கு போன் போட்டு எங்களுக்கு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.
பின்னர் உதயநிதியிடம் இருந்து போன் வந்தது. அவர் அழைத்ததன் பேரில் தேனாம்பேட்டைக்கு சென்றோம். அங்கு அவரும் குழந்தையிடம் அன்பாக பேசி இனி கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார். இதையடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தோம், உடனே அந்த வீட்டின் பணியாளர் ஒருவர் ஓடி வந்து நில்லுங்கள் உங்களை முதல்வர் அழைக்கிறார் என்றார்.
உடனே உள்ளே போனோம். குழந்தையை அவர் சொந்த பேத்தி போல் தோளில் போட்டு கொஞ்சி பேசினார். எங்கே தங்கியிருக்கீங்க என கேட்டார், பிளாட்பார்மில் என்றதும் உதய்யண்ணாவிடம் இவர்களுக்கு ஒரு வீடு ஒதுக்கித் தாருங்கள் என்றார். இதையடுத்து எங்களுக்கு உதயநிதி வீடு ஒதுக்கி பட்டாவையும் கொடுத்துவிட்டார். இனி நானும் மற்றவர்களை போல் வீட்டுக்கு போகிறேன் என சொல்லிக் கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications