மட்டன் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. சிங்கப்பூர் ஆய்வு சொல்லும் அந்த 48 சதவீத ஆபத்து இதுதான்
சென்னை: ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் தான் இருக்கிறது.. குறிப்பாக அசைவ பிரியர்களுக்கு ஆட்டுக்கறி என்றால் தனி பிரியம் தான்.. ஆனால் அதே சமயம் ஆட்டுக்கறி போன்ற சிவப்பு இறைச்சிகளை சாப்பிடும்போது சில எச்சரிக்கைகளையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
ஆட்டுக்கறியில் உடலுக்குத் தேவையான புரதச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் கொட்டிக்கிடக்கின்றன.. குறிப்பாக ஆட்டு ரத்தம் பலருக்கும் பிடித்தமான ஒரு உணவாகும்.. இதில் சோடியம், கால்சியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன..

ஆட்டுக்கறி நன்மைகள்
வளரும் குழந்தைகளுக்கு ஆட்டு ரத்தத்தை பொரியல் செய்து கொடுப்பது அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும் உடல் வலிமைக்கும் பெரும் உதவியாக இருக்கும்.. ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்கள் ஆட்டு ரத்தத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் புதிய ரத்தம் ஊறும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது..
அசைவம் சாப்பிட்டாலே உடல் எடை கூடும் என்று பலரும் பயப்படுவார்கள்.. ஆனால் ஆட்டு ரத்தத்தில் உள்ள வைட்டமின் B சத்தானது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிக்க உதவுகிறது.. இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட அளவோடு ஆட்டு ரத்தத்தை சாப்பிடலாம்.
ஆட்டு கொழுப்பு சாப்பிடலாமா
ஆட்டு கொழுப்பை பொறுத்தவரை இடுப்பு வலி மற்றும் மூட்டு வலி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது.. புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.. கண் பார்வை குறைபாடு நீங்கவும் ஆட்டுக்கறி ஒரு முக்கிய உணவாகப் பார்க்கப்படுகிறது.. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் விஷயத்தில் மட்டும் நாம் சற்று நிதானமாக இருக்க வேண்டும்..
சிவப்பு இறைச்சி என்று சொல்லப்படும் ஆடு, மாடு மற்றும் பன்றி இறைச்சிகளில் சாச்சுரேட்டட் ஃபேட் எனப்படும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகமாக இருக்கின்றன.. இவை ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தி இதய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு டைப் 2 நீரிழிவு பாதிப்பை இது அதிகப்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன..
சிங்கப்பூர் ஆய்வின் 48 சதவீதம்
சிங்கப்பூர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூட சிவப்பு இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 48 சதவீதம் அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆட்டுக்கறியை தவிர்ப்பது நல்லது அல்லது மிகக்குறைந்த அளவில் அவ்வப்போது எடுத்துக் கொள்ளலாம்..
அதற்கு பதிலாக சிக்கன் மற்றும் மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.. மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு பாதுகாப்பு தருவதோடு வைட்டமின் டி சத்தையும் வழங்குகின்றன.. ஆனால் எவ்வகை அசைவ உணவாக இருந்தாலும் அதனை எண்ணெய்யில் பொரித்தோ அல்லது வறுத்தோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மட்டன் பிரியர்கள்
குழம்பாக வைத்து சாப்பிடும்போது மட்டுமே அதன் முழுமையான சத்துக்கள் உடலுக்குக் கிடைக்கும்.. ஆரோக்கியமான உடல்நிலை கொண்டவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை சிறிதளவு ஆட்டுக்கறி சிறிதளவு சாப்பிடலாம். ஆனால் ஏற்கனவே உடல் உபாதை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உணவை அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்..
உணவே மருந்து என்பதை மனதில் கொண்டு எதையும் அளவோடு சாப்பிட்டால் நோயற்ற வாழ்வை நாம் வாழ முடியும்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது அசைவ உணவுகளுக்கும் பொருந்தும்..
எனவே ருசிக்காக சாப்பிடுவதை விட ஆரோக்கியத்திற்காக சரியான உணவைத் தேர்ந்தெடுப்பதே மிக முக்கியம்.. இதன் மூலம் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும்..!!












Click it and Unblock the Notifications