இனி சினிமாவுக்கு போனாலே செலவு எகிறும்.. ஜிஎஸ்டி மாற்றத்தால் கூடுதலாக எவ்வளவு செலவாகும்?
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த வரி மாற்றம் நமது வாழ்க்கையில் பலவித மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்கள் சினிமாவுக்கு செல்லும்போது இந்த ஜிஎஸ்டி வரி மாற்றம் எதில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக 12% மற்றும் 28% வரி நீக்கப்பட்டன. இப்போது பெரும்பாலான பொருட்களுக்கு 5% மற்றும் 18% என இரு வரிகள் மட்டுமே விதிக்கப்படும். வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் இந்த வரி அமலுக்கு வருகிறது.

ஜிஎஸ்டி
இந்த புதிய வரி முறை நமது வாழ்க்கை முறையை எல்லா விதத்திலும் பாதிக்கும். ஒருவேளை நீங்கள் சினிமாவுக்குப் போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்போது இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முதலில் சினிமா டிக்கெட். முன்பு ரூ.100க்குள் இருக்கும் டிக்கெட்களுக்கு 18% வரி விதிக்கப்பட்ட நிலையில், இப்போது அது 5%ஆக குறைந்துள்ளது. எனவே நீங்கள் எடுக்கும் டிக்கெட் ரேட் ரூ.100க்கு கீழ் இருந்தால் வரி பெரிதாகக் குறையாது. அதேநேரம் பெரும்பாலான தியேட்டர்களில் ரூ.100க்கு மேல் தான் டிக்கெட் இருக்கும். இதனால் அந்த டிக்கெட்களுக்கு முன்பு இருந்தது போலவே 18% வரி தொடரும்.
பாப்கார்ன் பிரச்சினை ஓவர்
அதேபோல பாப்கார்ன், ஸ்நாக்ஸ் இல்லாமல் எந்தவொரு சினிமா எக்ஸ்பீரியன்ஸும் முழுமையடையாது. முன்பு பாப்கார்ன் ஜிஎஸ்டி தான் பெரிய பஞ்சாயத்தாக இருந்தது. அதாவது சால்ட் பாப்கார்ன் பேக் செய்யப்பட்டு விற்கப்பட்டால் 12% வரி, லூஸில் விற்கப்பட்டால் 5% வரி, கேரமல் எனப்படும் இனிப்பு பாப்கார்னுக்கு 18% வரி விதிக்கப்பட்டு இருந்தது. ஒரு பாப்கார்னுக்கு 3 விதங்களில் வரி விதிக்கப்பட்டது சர்ச்சையானது. இது தொடர்பாகப் பல மீம்ஸ்களையும் பார்க்க முடிந்தது. இதனிடையே தான் வரி சீரமைப்பில் சால்ட் பாப்கார்னுக்கு 5%, இனிப்பு பாப்கார்னுக்கு 18% என சற்று எளிமையாக்கப்பட்டுள்ளது.
ரேட் எகிறும்
அடுத்தது கூல் டிரிங்க்ஸ். முன்பு பெப்சி, கோக் உள்ளிட்ட கூல் டிரிங்க்ஸுக்கு 28% வரி விதிக்கப்பட்டது. இப்போது அதை மாற்றி 40%ஆக வரி உயர்த்தப்பட்டுள்ளது. தியேட்டரில் சும்மாவே கூல் டிரிங்க்ஸ் மிக அதிக விலைக்குத் தான் விற்கப்படும். இப்போது அது மேலும் காஸ்ட்லியாகிறது. அதாவது முன்பு ரூ.350க்கு விற்கப்பட்ட கூல் டிரிங்க்ஸ் விலை இப்போது ரூ.448க்கு உயரும்.
அதேபோல ஐஸ்க்ரீம் மற்றும் பிஸ்கட் பொருட்கள் மீதான ஜிஎஸ்டியும் குறைக்கப்படுகிறது. ஐஸ்க்ரீம் மற்றும் பிஸ்கட்களுக்கு முன்பு 18% வரி விதிக்கப்பட்ட நிலையில், இப்போது அது 5%ஆக குறைக்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக எப்படி?
உதாரணத்திற்கு இருவர் சினிமாவுக்கு போகும்போது, டிக்கெட் விலையில் மாற்றம் இல்லை. 800 மதிப்புள்ள ஒரு பெரிய சால்ட் பாப்கார்ன் வாங்குகிறீர்கள் என்றால் ஜிஎஸ்டி சேர்த்து அது ரூ.840 ஆகும். அதேபோல ரூ.450 மதிப்பிலான இரண்டு கூல் ட்ரிங்ஸ் வாங்கினால் ஜிஎஸ்டி சேர்த்து ரூ.1260க்கே போய்விடும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தோம் என்றால் நீங்கள் வெறுமன சினமாவுக்கு மட்டும் போய் வரும் ஜோடியாக இருந்தால் உங்களுக்குப் பெரியளவில் செலவு அதிகரிக்காது. அதேநேரம் சினிமாவுக்கு சென்றால் ஸ்நாக்ஸ் நிச்சயம் சாப்பிடுவோம் என்றால் உங்களுக்குச் சிக்கல் தான். கொஞ்சம் கூல் ட்ரிங்க்ஸ் பக்கம் போனாலே பைசா காலியாகிவிடும்.












Click it and Unblock the Notifications