சேலம் - திண்டுக்கல் , ஓசூர் - ஓமலூர், அரக்கோணம் - ரேணிகுண்டா.. தமிழகத்தின் கனவு நிஜமாகியது
சென்னை: அரக்கோணம் - ரேணிகுண்டா 3-வது மற்றும் 4-வது பாதை, ஓசூர் - ஓமலூர் இரட்டைப் பாதை , சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டைப் பாதை என நான்கு பாதை திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் ரயில் சேவைகள் மாறப்போகிறது. பல ஆண்டுகளாக எதிர்பார்த்த இந்த திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது ரயில் பயணிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு, சுமார் ரூ.10,021 கோடி மதிப்பிலான ஐந்து ரயில்வே பலவழிப் பாதை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

2029-30 நிதியாண்டிற்குள் முடிக்க வேண்டும் என மத்திய அராசல் திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டங்கள், தற்போதைய இந்திய ரயில்வே வலையமைப்பில் சுமார் 540 கி.மீ தொலைவை சேர்க்கும். அதேபோல நான்கு மாநிலங்களில் உள்ள 17 மாவட்டங்களை உள்ளடக்கும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.
அரக்கோணம் - ரேணிகுண்டா 3-வது மற்றும் 4-வது பாதை - 77 கி.மீ
வொயிட்பீல்டு (பெங்களூரு) - பங்காரப்பேட்டை 3-வது மற்றும் 4-வது பாதை - 47 கி.மீ
ஓசூர் - ஓமலூர் இரட்டைப் பாதை - 147 கி.மீ
சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டைப் பாதை - 159 கி.மீ
செகந்தராபாத் (காட்கேசர்) - காசிபேட் பலவழிப் பாதை - 110 கி.மீ (தெலுங்கானா)
இதில் அரக்கோணம் - ரேணிகுண்டா 3-வது மற்றும் 4-வது பாதை , ஓசூர் - ஓமலூர் இரட்டைப் பாதை, சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டைப் பாதை ஆகியவை தமிழ்நாட்டு மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்கள் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வழித்தடங்களில் நெரிசலைக் குறைப்பதற்காக போடப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் ரயில் இயக்கம் தென்மாநிலங்களில் மேலும் வலுப்பெறும், பல ரயில்களை இயக்க வழிவகை செய்யும். விரைவாக ரயில் போக்குவரத்து வசதியை வருங்காலத்தில் பல பகுதிகளுக்கு மேம்படுத்த இந்த திட்டம் உதவியாக இருக்கும்
ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புத் திட்டமிடல் மூலம் பன்முனை இணைப்பு மற்றும் தளவாடத் திறனை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு, PM Gati Shakti தேசிய முதன்மைத் திட்டத்தின் கீழ் இத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசின் கூற்றுப்படி, இத்திட்டங்கள் சுமார் 52 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஏறத்தாழ 2,121 கிராமங்களுக்கான ரயில் இணைப்பு மேம்படும.
விரிவாக்கப்பட்ட ரயில் வலையமைப்பு, திருப்பதி, திருத்தணி முருகன் திருக்கோயில், திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோயில், கோலார் தங்க வயல், ஒகேனக்கல் அருவி, மேட்டூர் அணை, கொடைக்கானல் மற்றும் யாதகிரிகுட்டா திருக்கோயில் உள்ளிட்ட தென்னிந்தியாவின் முக்கியச் சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு இந்த ரயில் பாதை விரிவாக்க திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்க போகிறது.
அதேபோல் ஆன்மிகம், சுற்றுலா, மக்கள் போக்குவரத்து ஆகியவற்றை தாண்டி, நிலக்கரி, சிமெண்ட், இரும்பு மற்றும் எஃகு, கன்டெய்னர்கள், வாகனங்கள், உணவு தானியங்கள், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் உரங்கள் உள்ளிட்டப் பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல இந்த வழித்தடங்கள் மிக முக்கியமானவை. எனவே இங்கு புதிய பாதைகள் அமைப்பதன் மூலம் ஆண்டுக்குச் சுமார் 47 மில்லியன் டன் கூடுதல் சரக்கு போக்குவரத்திற்கு வழிவகுக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது.
சரக்கு போக்குவரத்தை அதிகளவில் ரயில்வேக்கு மாற்றுவதன் மூலம், நாட்டின் தளவாடச் செலவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கான முயற்சிகளுக்கு இத்திட்டங்கள் ஆதரவளிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கூடுதல் திறன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி சுமார் 8 கோடி லிட்டர் குறையும் என்றும், கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு சுமார் 42 கோடி கிலோ வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் 2 கோடி மரங்களை நடுவதற்குச் சமம் என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக ரயில்வே உள்கட்டமைப்பை விரிவாக்கம் செய்யும் பணிகள் அவ்வப்போது நடைபெறும். அதேநேரம் அதிகப் போக்குவரத்து கொண்ட வழித்தடங்களில் உள்ள சிக்கல்களை களையவே அரசு பொதுவாக முக்கியத்துவம் தருகிறது. அந்த வகையில் மிகவும் பிஸியாக உள்ள இந்த வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலையில், சரக்கு ரயில்களை அதிக அளவில் இயக்க முடியாத நிலையில் தான் ரயில்வே இருக்கிறது. எனவே இந்த ஐந்து புதிய பாதைகள் அமைப்பதால் அந்த சிக்கல்கள் நிச்சயம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
