லோக்சபா மோதல்: தரங்கெட்ட வார்த்தைகள்..தரங்கெட்ட பேச்சு.. டிஆர் பாலு மீது எல்.முருகன் சரமாரி அட்டாக்!
சென்னை: லோக்சபாவில் தம்மை நோக்கி திமுக எம்பி டிஆர் பாலு தரங்கெட்ட பேச்சு பேசியிருக்கிறார்; இப்படி அவர் பேசுவது முதல் முறையும் அல்ல என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடுமையாக சாடியுள்ளார்.
லோக்சபாவில் தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவாரண நிதியை தர மறுக்கும் மத்திய அரசை திமுக எம்பி டிஆர் பாலு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது மத்திய அமைச்சர்கள் நிதியானந்த ராய், தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டனர்.

ஆனாலும் டிஆர் பாலு தமது பேச்சை குறுக்கீடுகளுக்கு இடையே தொடர முயற்சித்தார். இன்னொரு பக்கம், டிஆர் பாலுவை கேள்வி கேட்கவிடாத வகையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டுக் கொண்டே இருந்ததார். இதனால் கொந்தளித்த டிஆர் பாலு, நீங்க எம்பியாக இருக்க Unfit என ஆவேசப்பட்டார். உடனே மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால், பிரகலாத் ஜோஷி ஆகியோர் எல்.முருகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். உச்சகட்டமாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ஒரு தலித் அமைச்சரை எப்படி Unfit என சொல்லலாம்? ஒட்டுமொத்த தலித் சமூகத்தையே டிஆர் பாலு அவமானப்படுத்திவிட்டார் என திசை திருப்பிவிட்டார். இதனால் இப்போது தலித் எம்பியை டிஆர் பாலு அவமரியாதையாக பேசிவிட்டதாக பிரச்சனை திரும்பிவிட்டது.


எல். முருகன் கண்டனம்: இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: திமுக-வின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் இன்று மக்களவையில் வெளிப்பட்டுள்ளது. சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுக-வைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூகநீதிக்காரர்கள்.
தரங்கெட்ட பேச்சு: பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களுக்கும் ஏற்ப பணி செய்ய நேரமில்லாதவர்கள், தேர்தல் காலங்களின் போது வெற்றி பெற உருவாக்கும் காகித குப்பையே 'சமூகநீதி' எனும் தேர்தல் அறிக்கை.
பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்களின் வளர்ச்சிப் பணிகளை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள், அவர்களுடைய கையில் எடுக்கும் ஆயுதம் தான் இந்த தரங்கெட்ட வார்த்தைகள். திமுக-வைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவிற்கு இந்த தரங்கெட்ட பேச்சு முதல் முறையல்ல. தன்னுடைய வாழ்க்கை முறையை அதற்கேற்ப வாழ்ந்து பழகியவர் இனியும் இதை நிறுத்தப் போவதில்லை என்பது தெளிவாகிறது.
போலி திராவிட மாடல் : சமூகநீதிக்கும் இவர்களுக்கும் இருக்கும் தூரத்தை இன்று காட்டியுள்ளார்கள். போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பத்தை முகத்தில் மாட்டிக் கொண்டு திரியும் உங்களின் (திமுக) முகமூடியை, வருகின்ற தேர்தலில் மக்கள் கிழித்தெறிவார்கள் என்பதில் எந்த மாற்றமுமில்லை. இவ்வாறு எல். முருகன் தெரிவித்துள்ளார்.
டிஆர் பாலு மன்னிப்பு கேட்கனும்: இதேபோல தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் திமுகவின் டிஆர் பாலு எம்பிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மத்திய அமைச்சர் எல். முருகன் @Murugan_MoS அவர்களை பாராளுமன்றத்தில் தரக்குறைவாக தகுதியற்றவர் என்று @arivalayam வின் மூத்த உறுப்பினர் டி. ஆர். பாலு அவர்கள் அவதூறாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இளம் வயதில், சுறுசுறுப்பாக அமைச்சராக பணியாற்றுகிற ஒரு இளம் தமிழர் மீது திமுக விற்கு வெறுப்பு ஏன்? வன்மம் ஏன்? ஒரு தமிழன் அமைச்சராக இருக்கிறார் என்பதாலா? அல்லது நீதிக்கட்சியின் கொள்கை வழி நடப்பதாக மார்தட்டிக் கொள்கிற தி மு க வின் பட்டியலின வெறுப்பினாலா? டி. ஆர். பாலுவும், திமுக வும் தமிழர்களிடத்திலும், பட்டியலின சமுதாய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications