மார்ச் 10: இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் 75ம் ஆண்டு பவளவிழா மாநாடு -முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 75-ம் ஆண்டு பவளவிழா மாநாடு வரும் மார்ச் 10-ம் தேதி நடை பெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து கே.எம். காதர் மொகிதீன் அழைப்பு விடுத்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று சந்தித்தார்.
அவருடன் கேரள மாநில தலைவர் சாதிக் அலி ஷிகாப் தங்கள், தேசிய பொதுச் செயலாளரும், கேரளா சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான பி.கே. குஞ்சாலிகுட்டி, பாராளுமன்ற உறுப்பினர்கள் இ.டி. பஷீர், அப்துல் வஹாப், அப்துல் சமது சமதாணி, கே. நவாஸ் கனி, மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் எஸ். அன்சாரி மதார், ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது ஆகியோரும் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்தனர்.

சென்னையில் தொடக்க விழா
முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்த பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் 75-வது ஆண்டு பவளவிழா மார்ச் 10 -ம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் தொடக்கவிழா நடத்தவுள்ளோம்.

முதல்வர் கலந்துகொள்வதாக தெரிவித்தார்
சென்னையில் நடக்கும் தொடக்க விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். முதல்வரும் கலந்து கொள்வதாக தெரிவித்தார். பவள விழா மாநாடு சென்னை கொட்டிவாக்கம் ராஜீவ்காந்தி சாலை (ஒ.எம்.ஆர். சாலை ) யில் மாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. முன்னதாக காலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கிய இடமான ராஜாஜி ஹாலில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும்
இதனை தொடர்ந்து பவள விழா ஒவ்வொரு மாநிலத்திலும் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது. 2024 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி புதுடெல்லியில் பவள விழா நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதில் அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம்.

பொங்கல் வாழ்த்து
முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களும் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய தலைவர்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டோம். நல்லாட்சி தொடரவும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications