பிஜேபியின் தாமரை சின்னத்தில் கரைந்த தனித்துவம்: தமிழக அரசியலில் மாநில கட்சிகளுக்கு தலைகீழ் டுவிஸ்ட்
சென்னை: தமிழக அரசியல் அரை நூற்றாண்டு காலமாக திராவிட சிந்தனையை மையமாகக் கொண்டு நடைபெற்று வருகிறது. சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சி என்பது தமிழக அரசியலின் அடிப்படை அம்சங்களாக இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக வலுவடைந்து, மாநிலக் கட்சிகளின் நிலையை மாற்றியுள்ளதை காணலாம்.. ஆனால், இந்த மாற்றத்தில் முக்கிய கேள்வி என்னவென்றால், பாஜவுடன் கூட்டணி அமைக்கும் மாநிலக் கட்சிகள் தங்களது தனித்துவத்தை இழக்கிறார்களா? என்பதுதான்..!!!
பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் சிறிய மற்றும் பெரிய கட்சிகள் தங்களது வாக்கு வங்கியை இழப்பதாக ஒரு பேச்சு அரசியல் களத்தில் கிளம்பி உள்ளது.. தங்களது வாக்கு வங்கியை இழக்க காரணமாக கருதப்படுவது 'சின்னம்' அரசியல்தான் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்...

உதாரணத்துக்கு கடந்த தேர்தல்களில், புதிய நீதி கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற சிறிய கட்சிகள் பாஜவின் "தாமரை" சின்னத்தில் போட்டியிட்டன.
பாஜக தாமரை சின்னம்
2019 மக்களவைத் தேர்தலில் புதிய நீதி கட்சி தனது தனிப்பட்ட வாக்குகள் 1.5% மட்டுமே பெற்றிருந்தது. ஆனால் பாஜவின் சின்னத்தில் போட்டியிட்டதால் அந்த வாக்குகள் முழுவதும் பாஜவுக்கு சேர்க்கப்பட்டன. இதன் விளைவாக பொதுமக்களின் மனதில் அந்தக் கட்சியின் தனித்துவம் மறைந்து விட்டது. இதேபோல், ஏ.சி. சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சி மற்றும் பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி தங்களது தனித்துவ அடையாளத்தை இழந்தன.
அதிமுக வாக்கு வங்கி
மாநில கட்சிகளின் நிலை பெரியதாக இருந்தாலும், பாஜவுடன் கூட்டணி அமைத்த பிறகு அவற்றின் வாக்கு வங்கி குறைந்தது. உதாரணமாக, 2019 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நகர்ப்புற மாவட்டங்களில் 45% வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் பாஜவுடன் கூட்டணி அமைத்த பிறகு அதே மாவட்டங்களில் அதிமுக வாக்கு சதவீதம் சராசரியாக 32% ஆகக் குறைந்தது.
இதன் விளைவாக சில முக்கிய இடங்களில் அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. பாமக வட தமிழகத்தில் வலுவான வாக்கு வங்கியைக் கொண்டிருந்தாலும், பாஜவுடன் இணைந்த பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலில் அதன் வாக்கு சதவீதம் 12% குறைந்தது. இதனால் மாநிலக் கட்சிகள் தங்களது செல்வாக்கை இழந்தன.
சரத்குமார், கூட்டணி கட்சிகள்
17 ஆண்டுகால அரசியல் பயணத்தை முடித்துக்கொண்ட சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை 2021ம் ஆண்டு பாஜவுடன் இணைத்தார். இதனால் அவரது கட்சியின் தனித்துவ வாக்குகள் பாஜவின் சின்னத்தில் இணைக்கப்பட்டு மாநிலக் கட்சியின் தனித்துவ அடையாளம் குறைந்தது.
தமிழக அரசியலில் எப்போதும் சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சி முக்கியமாக இருந்தது. பாஜவின் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' கொள்கையும் இந்துத்துவக் கொள்கைகளும் மாநிலக் கட்சிகளின் அடிப்படை கொள்கைகளோடு முரண்படும் போது, நடுநிலை வாக்காளர்கள் திமுக கூட்டணிக்கு நகர்கின்றனர். இந்த இடைவெளியை பாஜவின் வாக்குகள் ஈடுகட்டாததால் மாநிலக் கட்சிகள் தேர்தல் களத்தில் பலவீனமடைகின்றன.
எடப்பாடி பழனிசாமி
இப்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக, பாஜக, பாமக, அமமுக போன்ற கட்சிகள் மாபெரும் கூட்டணியை உருவாக்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இக்கூட்டணி திமுகவை வீழ்த்தும் வியூகம் வகித்தாலும், கூட்டணிக் கட்சிகள் தங்களது தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள முடியுமா என்பது மிகப்பெரும் கேள்வியாக உள்ளதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்..
வரப்போகும் 2026 தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் மாநிலக் கட்சிகளின் தனித்துவம் மற்றும் தேசியக் கட்சிகளின் தாக்கம் எது முன்னிலை பெறும் என்பதில் தீர்மானம் அளிக்கும் முக்கிய தருணமாக இருக்கும்.
சிறியதோ பெரியதோ அனைத்து மாநிலக் கட்சிகளும் தங்கள் அடிப்படை கொள்கைகளை காத்துக் கொள்ள முடியுமா? அல்லது தேசியக் கட்சிகளின் நீரோட்டத்தில் மிதந்து போகுமா? என்பது இனி தமிழக அரசியலின் பாதையை நிர்ணயிக்கும்... பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications